ஜோர்ஜ்டவூன், ஆக.14 – 

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ, ஐந்து நாள் தடுப்பு காவலுக்குப் பின்னர் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். சனிக்கிழமை துணை பதிவாளர் செய்திருந்த முடிவை பினாங்கு உயர்நீதிமன்ற நீதிபதி லிம் சோங் போங் தள்ளுப்படி செய்ததை அடுத்து பீ பூன் போ விடுவிக்கப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பீ பூன் போ , நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியதும் ஐனநாயக செயல் கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங்கை கண்ணீருடன் கட்டித் தழுவினார்.  இந்த கடினமான சூழ்நிலையில் தம்முடன் துணை நின்ற தமது வழக்கறிஞருக்கும் ஆதரவாளர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், சட்ட விரோத வர்த்தகம் அல்லது கட்டிடம் தொடர்பான மாநில அரசாங்கத்தின் கொள்கை நிலைநிறுத்தப்படும் என சொன்னார்.

சட்டவிரோத வர்த்தகத்தை உடனடியாக தடை செய்வதோ அல்லது சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தை இடிப்பதைக் காட்டிலும் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் வெற்றியைத் தரக் கூடிய ஒரு முடிவை எடுப்பதுதான் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என குவான் எங் கூறினார்.

இந்த விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முடிவுக்காக தாம் காத்து கொண்டிருப்பதாக குவான் எங் தெரிவித்தார். மாநில அரசாங்கத்தின் கொள்கையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தலையிட்டுள்ளதாகவும் குவான் எங் கூறினார்.