அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > விசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு! – நரேந்திர மோடி
அரசியல்இந்தியா/ ஈழம்உலகம்முதன்மைச் செய்திகள்

விசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு! – நரேந்திர மோடி

வாரணாசி, ஜன. 22-

விசா கட்டணம் கடப்பிதழ் போன்றவற்றில் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் அதில் தளர்வு ஏற்படும் என நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதற்கான நடைமுறையை இந்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கையை முழுமை பெறும் என்றும் பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் இந்தியா மிகச்சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளது. ஒரே உலகம் ஒரே சூரியன் ஒரே அடித்தளத்தில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என கூறினார்.

இந்தியா இப்பொழுது அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பொருளாதார வல்லமை பெற்ற நாடுகள் கூட சில முக்கியத் துறைகளில் இந்தியாவின் ஆதிக்கத்தை பார்த்து பிரமிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து இருப்பதாக கூறிய அவர் மக்களின் நன்மைக்காக செயல் திட்டங்களை மட்டுமே நாம் முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் தமது தலைமைத்துவத்தின் கீழ் பலதரப்பட்ட செயல்திட்டங்களை மக்களின் நன்மைக்காக முன்னெடுத்ததாக குறிப்பிட்ட நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியை சாடினார்.

இந்தியா தற்போது உயர்ந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. நமது லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் புலம்பெயர்ந்த இந்தியர்களும் துணை நின்று தோள் கொடுக்கவேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

புலம் பெயர்ந்த இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. புலம்பெயர்ந்த இந்தியர்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண்பதோடு அவர்களுடனான உறவை இந்தியா இன்னும் வலுப்படுத்தி கொள்ளும் என நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு துணை நின்று உதவி புரிந்தால் கூடிய விரைவில் இந்தியா சிறந்த பொருளாதார வல்லமையை பெரும்.

வாரணாசி புனிதத்தலம். இங்கு வரும் பக்தர்கள் மனநிறைவோடு இவ்விடத்தை விட்டு செல்கிறார்கள். அதேபோல் இந்த பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களும் அந்த அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறை இங்கு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் சுற்றுலாத்துறை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதனால் இனி இந்தியாவிற்கு பயணம் ஆகும் பொழுது ஐந்து குடும்பங்கள் ஒன்றாக இணைந்து கொள்ளுங்கள் என்று அறிவுரையையும் நரேந்திர மோடி வழங்கினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும் அதோடு தொடர்ந்து நம்மோடு நட்புறவை பேண வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நரேந்திர மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

உத்தரபிரதேசம் வாரணாசியில் நடைபெறும் பாரதிய திவாஸ் மாநாட்டில் அனைத்துலக நிலையில் இருந்து 5000 பேராளர்கள் கலந்து கொண்டார்கள் இதில் மலேசிய பேராளர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்புரை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன