புத்ராஜெயா, ஜன. 25
மலேசிய இந்தியர்கள் சமுதாய-பொருளாதார அளவில் வளர்ச்சி காண வேண்டும் என்பதற்காக பிரதமர் துறை சார்பில் தோற்றுவிக்கப்பட்ட நிதியம், தற்பொழுது ‘மித்ரா என்னும் பெயரில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது; இந்த நிதியத்தின் மூலம் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எந்தத் தரப்பினரும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் உதவியைப் பெற மித்ரா அலுவலகத்தை நாடலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மித்ரா சார்பில் வழங்கப்படும் நிதி இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் பொருள்படும்படி பினாங்கு தஞ்சோங் முஸ்லிம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மித்ரா சார்பில் இந்திய சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியுதவி தொடர்பில், நலிந்த பிரிவினர் மீட்சி, பி-40 தரப்பினர் மேம்பாடு ஆகியவைதான் கருத்தில் கொள்ளப்படுமே அன்றி சமயம் உள்ளிட்ட எந்த அளவுகோலும் பாகுபாடும் பார்க்கப்படுவது இல்லை.

எனவே, இந்திய சமுதாயத்தில் ‘பி-40 நிலையிலிருக்கும் மக்களின் மீட்சிக்காக பாடுபடும் அரசுசாரா அமைப்பு எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட இயக்கத்தின் பொறுப்பாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள மித்ரா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் ‘செனட்டர் பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.