கோலாலம்பூர், ஜன.27
மாணவர்கள் 1ஆம் வகுப்புத் தொடங்கி 5ஆம் படிவம் வரை முழுமையாகக் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்விச் சட்டத்தைத் அரசு மறுஆய்வு செய்து வருவதாக கல்வித் துணை அமைச்சர், தியோ னீ சிங் தெரிவித்தார்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக 5,000 வெள்ளி அபராதம் அல்லது 6 மாதச் சிறை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் 6ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்க கட்டாயப்படுத்தும் வகையில் நடப்பு கல்விச் சட்டம் உள்ளது. தற்போது நாட்டில் 98 விழுக்காட்டிற்கும் மேலான பிள்ளைகள் ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். எனினும், இதனை 100 விழுக்காடாக மாற்ற அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாக தியோ னீ சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தங்கள் பிள்ளைகளை 7 வயதில் பள்ளிக்குச் செல்லப் பதிவு செய்யாத பெறோர்களுக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும் இந்த அணுகுமுறையின் வாயிலாக ஆசிரியர்கள் உட்பட வட்டாரத் தலைவர்களும் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னையை கண்டறிந்த பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் நிதிப் பிரச்னையை சந்திக்கும் சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அமைச்சு தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.