இந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசைராஜாங்கம் செய்து வரும் இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது.

இந்த ஆண்டு அவர் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதால்,  வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழா என்று இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.அதுபோல், இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

இளையராஜாவின் இசையில், அதிகம் புகழ்பெற்ற நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இவ்விழாவில் பங்கேற்பதுடன் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்  இன்னும் சிலர், ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர். அவர்களது அழைப்பினை ஏற்று வரும் பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்கிறார்.

‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். அதைதொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறுநாள் பிப்ரவரி 3-ந் தேதி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.