சாலை போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களுக்கு இனி கழிவு இல்லை..!

0
13

சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி தவறு செய்யும் தரப்பினர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஜே.பி.ஜே எனப்படும் சாலைப் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

அதேவேளையில், சாலை விதிமுறைகளை மீறும் குற்றங்களுக்காக ஜே.பி.ஜே வெளியிடும் எந்தவொரு அபராதக் கட்டணங்களுக்கும் இனி கழிவுச் சலுகை வழங்கப்படக்கூடாது என்பதிலும் அது திட்டவட்டமாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி  லோக் கூறியிருக்கிறார்.

இந்த கழிவுச் சலுகை  கொள்கை, காலவரையற்றது என்பதால், அது தொடரப்படும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில், இதற்கு முன்னர் பெருநாள் காலங்களில் கழிவுச் சலுகை வழங்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டு கூறினார்.

சாலை விதிமுறைகளில் தவறு செய்யும் மக்கள் அதில் இருந்து, தங்களைத் திருத்திக்கொள்வதில் எந்த முனைப்பும் காட்டுவதில்லை. அது குறித்து கவலையடைவதும் இல்லை. செய்யும் குற்றத்திற்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே அந்த தவறு மீண்டும் நிகழாமல் இருக்கும் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி சாலை விபத்துகளை குறைக்கும் அதேவேளையில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டுனர்களுக்கு தவறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும் என்பதற்காகவே தமது அமைச்சு இம்முடிவினை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் செப்பாங்கில், சீனப்புத்தாண்டை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோனி இதனை கூறினார். இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பிலாஸ் மலேசியா நிறுவனத்தின் பணியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.