கேமரன் மலை வெற்றியின் உத்வேகம்; செமினி தொகுதியையும் வென்றெடுப்போம் -செனட்டர் டத்தோ சம்பந்தன் நம்பிக்கை

0
27

செமினி, ஜன. 29
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது அக்கட்சிக்கு புதிய உத்வேகத்தை தந்தது. அந்த உத்வேகம் வரும் செமினி சட்டமன்றத் தொகுதியிலும் பிரதிபலிக்கும் என ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல. இருப்பினும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்துக்கொண்டது. இது மக்களுக்கு மீண்டும் தேசிய முன்னணியின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது என்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை கூட்டணி அரசு வழங்கிய வெற்று வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முடிவு காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நடப்பு அரசாங்கம் தேசிய முன்னணி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதன் காரணமாக மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டோல் சாவடி அகற்றப்படும், பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்படும்! கல்விக்கடன் உதவி ரத்து செய்யப்படும், அதோடு இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என வழங்கிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாகத்தான் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை நம்பிக்கை கூட்டணி வெல்ல முடியவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த வெற்றியானது செமினி சட்டமன்ற தொகுதியையும் தேசிய முன்னணி வெல்வதற்கு புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கின்றது. 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக செமினி சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி தான் வைத்திருந்தது. கடந்த தேர்தலில் அத்தொகுதியில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மீண்டும் அத்தொகையை தேசிய முன்னணி கைப்பற்றுவதற்கான காலம் கனிந்து விட்டதாக சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கூட்டணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க தொடங்கியிருக்கின்றது. இந்த நம்பிக்கையானது தொடருமானால் செமினி சட்டமன்றத்தை எளிதாக நம்மால் வென்றெடுக்க முடியும் என சம்பந்தன் குறிப்பிட்டார். இத்தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கு தமது கட்சி சிறந்த நடவடிக்கைகளையும் பிரசாரத்தையும் இந்திய சமுதாயத்தின் மத்தியில் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மக்கள் இப்பொழுது மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். எந்த அரசு தங்களுக்கு நல்லது செய்தது என்பதை உணரக் கூடிய தருணத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள் போலவே செமினி வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இத்தொகுதியை தேசிய முன்னணி நிச்சயம் என்று எடுக்கும் என டத்தோ சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.