மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களின் போராட்ட உணர்வை பாராட்டினார் சோல்ஜ்ஸ்கர் !

0
12

மென்செஸ்டர் , ஜன.30-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் செவ்வாய்கிழமை நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டர்  யுனைடெட் 2 – 2 என்ற கோல்களில் பெர்ன்லியுடன் சமநிலைக் கண்டது. இந்த ஆட்டத்தில் இறுதி வரை போராடி தோல்வியைத் தவிர்த்த மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களை அதன் நிர்வாகி ஒலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்தாலும் இறுதி 7 நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு மென்செஸ்டர் யுனைடெட் சமநிலைக் கண்டிருக்கிறது. குறிப்பாக சோல்ஜ்ஸ்கர், மென்செஸ்டர் யுனைடெட் அணியில் ஓர் ஆட்டக்காரராக இடம்பெற்றிருந்தபோது இறுதி நிமிடங்களில் கோல் அடித்து அந்த அணியைக் காப்பாற்றியுள்ளார்.

1999 ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சோல்ஜ்ஸ்கர் இறுதி நிமிடத்தில் அடித்த வெற்றி கோலால், மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றதை மென்செஸ்டர் ரசிகர்கள் இன்றளவும் மறந்திருக்க மாட்டார்கள். பெர்ன்லிக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர்கள் செய்த தவறுகளால், அந்த அணி இரண்டு கோல்களைப் போட்டு முன்னணிக்கு சென்றது.

எனினும் 87 ஆவது நிமிடத்தில் போல் பொக்பா, பினால்டியின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட்டின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 92 ஆவது நிமிடத்தில் விக்டர் லின்டெலோப் போட்ட கோலின் வழி மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது.

ஒன்று அல்லது இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்தால் , மென்செஸ்டர் யுனைடெட் மீண்டு வருமா என்ற கேள்விக்கு விடைக் கிடைத்திருப்பதாக ஒலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் தெரிவித்தார். இறுதி வரை போராடும் ஆற்றலை தமது ஆட்டக்காரர்கள் பெற்றிருப்பதாக அவர் மேலும் கூறினார்.