அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் !
விளையாட்டு

பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் !

லண்டன், பிப்.3 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில், செல்சி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.  சனிக்கிழமை ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 5 – 0 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியை வீழ்த்தியது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 0 – 4  என்ற கோல்களில் போர்னிமோத்திடம் தோல்வி கண்டது. கடந்த 20 ஆண்டுகளில் பிரீமியர் லீக் போட்டியில் செல்சி  சந்தித்த மிகப் பெரிய தோல்வியாகும். இந்நிலையில் சனிக்கிழமை  நடைபெற்ற ஆட்டத்தில், செல்சி மீண்டும் தனது பழைய ஆட்டத் தரத்திற்கு திரும்பியது.

செல்சியில் புதிதாக இணைந்திருக்கும் கன்சாலோ ஹிகுவாய்னும், எடின் ஹசார்ட்டும், ஹடேர்ஸ்பீல்ட்டை பந்தாடினர். முதல் பாதி ஆட்டத்தில் ஹிகுவாய்ன் முதல் கோலைப் போட்ட வேளையில், எடின் ஹசார்ட் பினால்டி மூலம் இரண்டாவது கோலைப் போட்டார்.

இரண்டாம் பாதியில் மேலும் அதிரடியாக விளையாடிய செல்சி, கன்சாலோ ஹிகுவாய்ன், எடின் ஹசார்ட், டாவிட் லுவிஸ் மூலம் மூன்று கோல்களைப் போட்டது.  இந்த வெற்றியின் மூலம் இரண்டு தொடர் தோல்விகளுக்கு செல்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதனிடையே, வெம்பிளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 – 0 என்ற கோலில் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், தற்காலிகமாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூகாசல் யுனைடெட் தற்காப்பு அரணை உடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடித்து கொண்டது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் தென் கொரிய ஆட்டக்காரர் ஹியூங் சொன் மின் போட்ட கோல் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன