அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆலயங்களில் அமாவாசை தர்ப்பணம்: மிக பெரிய தவறு! – பிரமஶ்ரீ திஷகர சர்மா
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆலயங்களில் அமாவாசை தர்ப்பணம்: மிக பெரிய தவறு! – பிரமஶ்ரீ திஷகர சர்மா

ரவாங்,  பிப் 4-
முன்னோர்களுக்கு அமாவாசையை ஒட்டி செய்யப்படும் தர்ப்பணங்களை ஆலயங்களில் செய்யக்கூடாது என ஜெஞ்ஜாரோங் முனீஸ்வரர் கருமாரியம்மன் தலைமை குருக்கள் பிரமஶ்ரீ திஷகர சர்மா வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைகளில் உயிர் துறந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சிறப்பு அம்சத்தை கொண்டு வரும். இதை உண்மையில் அறிந்து கொண்டவர்கள் மாதம்தோறும் அதனை தவறாமல் செய்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் முன்னோர்களுக்கு அதாவது நமது பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது எந்த அளவிற்கு நன்மையைத் தரும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் இருக்கும் மகத்துவத்தை அறிந்து கொண்ட பிறகு அவர்கள் ஒவ்வொரு மாதமும் இதனை செய்து வருகிறார்கள்.

எல்லா இடங்களிலும் எல்லா தளங்களிலும் இந்த தர்ப்பண காரியங்களை செய்து விட முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பில் இந்து சமுதாயம் விழிப்புணர்வில் இருக்க வேண்டும் என பிரமஶ்ரீ திஷகர சர்மா வலியுறுத்தினார்.

கடற்கரை, ஓடும் நதி, ஆறு போன்ற இடங்களில் மட்டுமே தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதை விடுத்து இப்போது பல ஆலயங்களில் தர்ப்பணத்தை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இது தர்ப்பணம் செய்பவர்களுக்கு நன்மையைக் கொண்டு வருமா? என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

சமயம் சார்ந்த எந்த ஒரு விவகாரத்தை கையில் எடுக்கும் பொழுது அதில் இருக்கும் நுணுக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமாவாசை தர்ப்பணம் என்பது ஓடும் நதியில் செய்வதாகும். அதைவிடுத்து ஆலயங்களில் செய்கிறார்கள். அதோடு அமாவாசை தர்பணத்திற்கு பயன்படுத்திய பொருட்களை ஆற்றில் விடாமல் அங்கேயே விட்டு விட்டுச் செல்வது மிகப்பெரிய பாவச் செயலாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மண்ணில் நமக்கான அடையாளத்தை கொடுத்த நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் ஒரே காரியம் தர்ப்பணம். இந்த தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ள ஆடி அமாவாசைக்கு பூமிக்கு வரும் நமது பித்ருக்கள் தை அமாவாசையில் திரும்புவதுதான் ஐதீகமாக இருக்கின்றது. அதனால் இந்த தை அமாவாசை தர்பணத்திற்கு மிகப்பெரிய சிறப்பு அம்சம் உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரவாங் டெம்ப்லேர் பார்க் கருமக்கிரிகை மண்டபத்தின் தலைவர் ஆறுமுகம்

அம்மாவாசையில் நமது முன்னோர்களுக்கு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதை இந்து சமயம் இப்பொழுது அறிய தொடங்கியுள்ளது. ஆனால் அதை முறையாக எப்படி செய்வது என்பதை தான் அவர்கள் அறிந்திருக்கவில்லை என பிரமஶ்ரீ திஷகர சர்மா தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்க ஆற்றங்கரையில் செய்யப்படும் தர்ப்பணத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் வழங்கினார்.

தை அமாவாசை தர்ப்பணம் ரவாங் டெம்ப்லேர் பார்க் ஆற்றங்கரையில் கருமக்கிரிகை மண்டபத்தில் நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இங்கு அனைத்து வசதிகளும் இருப்பதால் மனநிறைவு கிடைப்பதாக இந்த இடத்தில் தர்ப்பணம் செய்த வெங்கடேஸ்வர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

ரவாங் டெம்ப்லேர் பார்க் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய விரும்பும் அனைவருக்கும் ஏற்ற வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஆற்றங்கரையின் அருகில் இந்த மண்டபம் அமைந்திருப்பதால் தர்ப்பண பொருட்களை ஆற்றில் விடுவதற்கும் இது ஏதுவாக அமைகின்றது. அதோடு இங்கு பசுமாடு இருப்பதும் சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் அனைவரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருவதாக ரவாங் டெம்ப்லேர் பார்க் கருமக்கிரிகை மண்டபத்தின் தலைவர் ஆறுமுகம் கூறினார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றோம். அதை முறையாக செய்ய வேண்டும். அவர்கள் மனம் குளிர்ந்தால் நமது வாழ்க்கையும் இன்னும் மென்மேலும் உயரும் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன