அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி: வாக்குறுதி என்னவானது டத்தோ ஞானசேகரன் கேள்வி
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி: வாக்குறுதி என்னவானது டத்தோ ஞானசேகரன் கேள்வி

ஜோர்ஜ்டவுன் பிப் 4-

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படும் என நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்னவானது என பினாங்கு மாநில மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தலைவர் டத்தோ எம். ஞானசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

14ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தேசிய முன்னணி அரசு கடும் நெருக்குதலை வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இப்போது பினாங்கு மாநில ஆட்சியையும் மத்திய ஆட்சியையும் கொண்டுள்ள நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தமிழ் இடைநிலைப்பள்ளி உடனடியாக அமைக்கலாமே? அதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம்? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்போது கூறப்பட்டது. இந்த தகவல் உண்மை என்றால் உடனடியாக தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு நம்பிக்கை கூட்டணி அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் ஞானசேகரன் வலியுறுத்தினார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது பினாங்கு மாநில முதல்வராக இருந்த லிம் குவான் எங், மாநில அரசு தமிழ் இடை நிலைப் பள்ளியை கட்டுவதற்கு ஆவலாக இருப்பதோடு அதற்கான இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக கூறினார். அப்போது மத்திய அரசாங்கம் ஆக இருந்த தேசிய முன்னணி தங்களின் பரிந்துரைகளை நிராகரித்ததாக அவர் குற்றம் சாட்டி இருந்தார் என்ற தகவலையும் ஞானசேகரன் நினைவுகூர்ந்தார்.

இப்போதும் பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி தொடர்கின்றது. மத்திய ஆட்சியையும் அக்கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. குவான் எங் கூறியதைப் போல பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான நிலம் இருந்தால் அதற்கான கட்டுமானத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என அவர் கூறினார்.

லிம் குவான் எங் இப்போது நிதி அமைச்சராக இருக்கும் நிலையில் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கான மானியத்தை அறிவிப்பதோடு அந்த நடவடிக்கையை உடனடியாக தொடங்குவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை அவர்கள் முன் எடுக்காத பட்சத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி என்ற வாக்குறுதி தமிழ் வாக்காளர்களை கவர்வதற்கு முன்னெடுக்கப்பட்ட வெற்று வாக்குறுதி என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளை வைத்து அரசியல் நடத்த கூடாது எனக் கூறியவர்கள் தமிழ்ப்பள்ளியை கட்டித் தருகிறோம் என்ற வாக்குறுதியை முன்னிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று இருக்கின்றார்கள்.

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையும் என்ற நம்பிக்கையில் இந்திய சமுதாயம் இருக்கின்றது. மக்களின் நம்பிக்கையை ஏமாற்றுவதை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தொடர்கதையாக கூடாது என அவர் கடுமையாகச் சாடினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன