கோலாலம்பூர், ஆக. 14 –
வீடுகளிலுள்ள ‘வாட்டர் ஹீட்டர் எனப்படும் சுடுநீர்க் கருவி பழையதாக இருந்தால் அதனை பயனீட்டாளர்கள் புதிதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனப் பயனீட்டாளர்களுக்கு எரிபொருள் ஆணையம் (எஸ்.டி) வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திவரும் சுடுநீர்க் கருவிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் அது அவசியம். பாதுகாப்பற்ற சுடுநீர்க் கருவியால் மின்சாரத் தாக்கம், வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பது மிக அவசியம் என்று எரிபொருள் ஆணைய மின்சாரப் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவு இயக்குநர் முகமட் ஹில்மி அனாஸ் தெரிவித்தார்.

கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கி சந்தையில் பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய புதிய சுடுநீர்க் கருவிகள் விற்பனைக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்னர், மலேசியாவில் விற்கப்பட்ட சுடுநீர்க் கருவிகளில் உள்ள இரும்புக் குழாய்களில் மின்சாரம் ஊடுருவ முடியும் என்று தெரிந்த பிறகு, அதற்குத் தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சம் செயலிழந்து, சுடுநீர்க் கருவிகள் வெடித்த இரு சம்பவங்கள் சபா மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் நிகழ்ந்துள்ளதாக ஹில்மி குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவங்களில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கட்டடம் முழுவதும் தீக்கிரையாகியது. மேலும், மின்சார வேலைகள் அனைத்தையும் எரிபொருள் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வல்லுநர்களை வைத்துச் செய்யுமாறு ஹில்மி கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, பாதுகாப்பு அம்சம் கொண்ட சுடுநீர்க் கருவியைப் பொருத்தி இருப்பவர்கள், முறையான பராமரிப்பை மேற்கொண்டு வரவேண்டும். அது மட்டுமல்லாமல், சுடுநீர்க் கருவிகளில் சீரீம்-எஸ்டி முத்திரைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.