அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தைப்பூசத்தை அடுத்து தேசிய பொங்கல் விழாவிலும் டத்தோஸ்ரீ நஜிப்!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தைப்பூசத்தை அடுத்து தேசிய பொங்கல் விழாவிலும் டத்தோஸ்ரீ நஜிப்!

உலு லாங்காட், பிப். 8-

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளிலும் மக்களுடனான சந்திப்புகளிலும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு உயர்ந்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் பத்துமலை தைப்பூசப் பெருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கிய அவரின் நிழல்படங்கள் முகநூல் உட்பட அனைத்து சமூக தளங்களிலும் வைரலாக பரவியது.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் உட்பட கூடிய விரைவில் நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜிப் களமிறங்கி பிரச்சாரம் செய்யவிருக்கின்றார்.

இந்நிலையில் இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை ஐபிஎப் உலு லங்காட் தொகுதியின் ஏற்பாட்டில் மாதர், இளைஞர் பகுதியின் ஆதரவோடு தேசிய பொங்கல் விழா நடைபெறவிருக்கிறது. இந்த பொங்கல் விழாவிற்கு டத்தோஸ்ரீ நஜிப் தலைமை ஏற்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎப் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு டத்தோஸ்ரீ நஜிப் தலைமை ஏற்றார். இந்திய சமுதாயத்திற்காக தமது ஆட்சிக் காலத்தில் பல தரப்பட்ட நலத்திட்டங்களை தாம் கொண்டுவந்து இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். அதோடு நடப்பு அரசாங்கம் இந்தியர்களின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய பொங்கல் விழாவிலும் டத்தோஸ்ரீ நஜிப் கலந்து கொள்வது இந்திய சமுதாயத்தின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ நஜிப் எந்த விவகாரம் குறித்துப் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முன்னதாக இந்த தேசிய பொங்கல் விழா தாமான் பாங்கி ஜெயா விளையாட்டு மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கும் என ஐபிஎஃப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த தேசிய பொங்கல் விழாவில் 100 பேர் பொங்கல் வைக்கிறார்கள். அதோடு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உரி அடித்தல் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. அதோடு கோலம் வரைதல், வண்ணம் தீட்டும் போட்டி, இசை நாற்காலி என பலதரப்பட்ட போட்டிகள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இதில் கலந்துகொள்ள இணக்கம் தெரிவித்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்த தேசிய பொங்கல் விழா குறித்த மேல் விவரங்களுக்கு கணேஷ்குமாரை 014-3656695 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன