அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தமிழ்ப் பள்ளி மாணவர்களின் புத்தாக்க சாதனை-அமைச்சர் வேதமூர்த்தி பாராட்டு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப் பள்ளி மாணவர்களின் புத்தாக்க சாதனை-அமைச்சர் வேதமூர்த்தி பாராட்டு

கோலாலம்பூர், பிப்.9-

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் புத்தாக்கப் படைப்பில் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனைப் படைத்து வருவதுடன் தமிழ்ப் பள்ளிகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘2019 அறிவுசார் சொத்துடைமை, புத்தாக்கம், அறிவியல் கண்காட்சி-போட்டி’யில் கலந்து கொண்டு சாதனைப் படைத்த எட்டு தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள், அவர்களுக்கு துணை நின்ற ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து, பேங்காக்கில் இவ்வார தொடக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிலாங்கூர் ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப் பள்ளி,  கெடா கூலிம் தமிழ்ப் பள்ளி, ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப் பள்ளி. கேசல்ஃபீல்ஃப் தமிழ்ப் பள்ளி, தாமான் துன் அமீனா தமிழ்ப் பள்ளி, பூலோ ஆகார் தமிழ்ப் பள்ளி, வாகீசர் தமிழ்ப் பள்ளி, பெர்மாஸ் ஜெயா தமிழ்ப் பள்ளி ஆகிய எட்டு தமிழ்ப் பள்ளிகள் கலந்து கொண்ட வேளையில் அனைத்துத் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதில், ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப் பள்ளியும் கூலிம் தமிழ்ப் பள்ளியும் தங்கப் பதக்கம் வென்றன. ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப் பள்ளி வெண்கலப் பதக்கத்தையும் கூடுதலாக வெற்றி கொண்ட நிலையில் ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப் பள்ளி வெள்ளி-வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடி தந்தன. அதைப் போல கேசல்ஃபீல்ஃப் தமிழ்ப் பள்ளி, தாமான் துன் அமீனா தமிழ்ப் பள்ளி, பூலோ ஆகார் தமிழ்ப் பள்ளி, வாகீசர் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள்  வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் பெர்மாஸ் ஜெயா தமிழ்ப் பள்ளி மாணவர்க் குழு இரு வெண்கலப் பதக்கங்களை வாகை சூடி ஆசிரிய சமுதாயத்திற்கு சிறப்பைத் தேடி தந்தன.

இப்படி தொடர்ந்து மலேசியாவின் பெருமையை பன்னாட்டு அளவில் உயர்த்துவதுடன் அறிவியல் சிந்தனையுடன் திகழும் இத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் உன்னத நிலையை எட்டுவர் என்பது திண்ணம். அத்துடன், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் விளங்குவார்கள்.

இந்த நிலை தொடர வேண்டும். இதன் தொடர்பில் அயராதும் காலம் கருதாதும் பாடுபடும் ஆசிரியர்கள், துணை நிற்கும் பெற்றோரை சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். மாணவர்களும் அதற்கேற்ப தங்களை தக அமைத்துக் கொண்டு புத்தாக்க மனப்பான்மையிலும் அறிவியல் சிந்தனையிலும் சிறந்தோங்குவதற்கு மீண்டும் பாராட்டு தெரிவிப்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன