சிரம்பான், பிப். 12-

நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனைக்கு 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.

கடந்த ஆண்டு 14வது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் இந்த வாக்குறுதியை வழங்கினார்கள். ஆனால் இன்றளவு கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனையை நேரில் கண்டறிய யாரும் வராத காரணத்தால் மாநில மந்திரி பெசாரை சந்திப்பதற்கு குடியிருப்பாளர்கள் அனுமதியையும் கேட்டுள்ளனர்.

அதற்கு இதுவரையில் எந்த பதிலையும் மாநில அரசு வழங்காத பட்சத்தில் குடியிருப்பாளர்கள் இன்று மாநில அரசு அலுவலகத்தின் முன் திரண்டு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான கெட்கோ குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பதற்கான நடவடிக்கை முடக்கி விடப்படும் என்றும் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை கூட்டணி வாக்குறுதி வழங்கி இருந்தது.

2019ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் குடியிருப்பாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களை சந்திப்பதற்கு மாநில அரசாங்கம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகிய குடியிருப்பாளர்கள் மாநில அரசாங்கத்தின் அலுவலகத்தின் முன் தங்களின் மன ஓட்டங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மாநில மந்திரி பெசாரை சந்தித்து தங்களின் பிரச்சனைகளை நேரடியாக தெரிவிக்கும் வரை இவ்விடத்திலிருந்து நகரப் போவதில்லை என்பதையும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

பல மணி நேரமாக மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் காத்திருக்கும் குடியிருப்பாளர்கள் வெயிலின் காரணமாக மயக்கமடைந்துள்ளார். சிலர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் பதில் கிடைக்கும் வரை இதே இடத்தில் தான் இருப்போம் என்ற முழக்கத்துடன் அங்கேயே காத்திருக்கிறார்கள்.

மந்திரி பெசார் கெட்கோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து மகஜரை பெற்றுக் கொண்டால் மட்டுமே அவ்விடத்தைவிட்டு நகர்வோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.