கேமரன் மலையில்  சிவராஜ்! போர்ட்டிக்சனில தினாளன்!

சிரம்பான், ஆக. 14-

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் வேட்பாளராகவும் போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியில் மஇகா தேசிய இளைஞர் பகுதி துணைத் தலைவர் தினாளன் ராஜகோபால் வேட்பாளராகவும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நெகிரி மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மஇகா நெகிரி மாநில இளைஞர் பகுதியின் 23ஆவது பேராளர் மாநாடு மாநில மஇகா மண்டபத்தில் நடைபெற்றது.  இம்மாநாட்டில் தலைமையுரையாற்றிய மாநில இளைஞர் பகுதி தலைவர் எஸ்.சண்முகம் தமதுரையில் மஇகா இளைஞர்கள் பகுதி மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தியர்களின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய ஆற்றல்மிகு இளைஞர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இம்மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசிய நெகிரி மாநில மஇகா தலைவர் டத்தோ எல். மாணிக்கம் தமதுரையில் மாநில இளைஞர் பகுதி பொறுப்பை உணர்ந்து சிறந்த சேவையாற்றி வருகிறது. அவர்கள் மேலும் சிறந்த சேவையாற்றுவதற்கு அவர்களுக்கு ஜேபிபி எனும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  இளைஞர் பகுதியினர் மிகவும் சுறுசுறுப்பாக இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று ஒற்றுமையாக இணைந்து செயல்படுவது மன நிறைவையளிப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் சிறப்புரையாற்றுகையில் இந்தியர்களின் தாய்க் கட்சி மஇகா தான். மஇ காதான் தொடர்ந்து இந்தியர்களின் நலனுக்காக போராடி வருகிறது. மஇகாவிடம் உதவி பெற்றவர்கள் மஇகா அழிந்து விடும் என தகவல் சாதனங்களில் சொல்கிறார்கள்.

இந்த நன்றி கெட்டவர்களால் மஇகா அழிந்து விடாது. இந்தியர்களின் நலனுக்காக குரல் கொடுப்பது மஇகா மட்டும் தான். இன்று கட்சியில் இருக்கும் இளைஞர்கள் இந்தியர்களின் உயர்வுக்காக சிறந்த சேவையாற்றி வருகிறார்கள் என்றார். மாநில இளைஞர் பகுதி செயலாளர் இல.கலைமுகுந்தன் வரவேற்புரையுடன் தொடங்கிய இம்மாநாட்டில் மஇகா தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், மாநில துணைத் தலைவர் டத்தோ ராஜேந்திரன், செயலாளர் சுப்பிரமணியம், துணைச் செயாலாளர் எஸ். பத்துமலை, பொருளாளர் காளிதாஸ், மாநில மகளிர் தலைவி டாக்டர் பி. தனலெட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.