புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசியா வரும் வைகோவிற்கு கடும் எதிர்ப்பு!
அரசியல்இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மலேசியா வரும் வைகோவிற்கு கடும் எதிர்ப்பு!

கோலாலம்பூர், பிப்.14- 

பினாங்கில் வரும் சனிக்கிழமை 16.02.2019 “பாக்குமரத் தீவில் தேக்குமர(ற)த் தலைவன்” என்ற நூல் வெளியீடு காணவுள்ளது. பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களை பற்றிய இந்நூல் வெளியீட்டில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமைச்சர் லிம் குவான் எங் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரான வைகோ என்றழைக்கப்படும் வையாபுரி கோபால்சாமி நாயுடு அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.

வைகோ மலேசியா வருவதை கண்டித்து சமூக ஆர்வலரும் தமிழர் தேசிய களப்பணியாளருமான தமிழ்ப்புகழ் குணசேகரன்(தமிழர் களம்) அவர்கள் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன் ஒருமுறை மலேசியா வந்து திரும்பிய வைகோ, தமிழகம் சென்றடைந்ததும், தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களை எதிர்க்க வேண்டுமென்றும், தமிழர்கள் எழுச்சியை தடுக்க வேண்டுமென்றும், அதற்கு திராவிட கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைய வேண்டுமென்றும் பேசியிருந்தார். தமிழ்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்திவரும் வைகோவின் அந்த பேச்சு, தமிழர்கள் மீது அவர்கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிகாட்டியிருந்தது.

அதுமட்டுமில்லாது சமீபத்தில் அவர் கட்சியின் தலைமை பேச்சாளராக இருக்கும் தனமணி வெங்கட் எனும் பெண், கம்ம நாயுடு மாநாட்டில் ஆற்றிய உரை தமிழர்களை இழிவுபடுத்தும் வகை அமைந்திருந்தது. தமிழர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் குடியேறிய வந்தேறிகள் என்பது தான் அது. தமிழ் தமிழ் என்று முழங்கிய வைகோ, ஈழ போராட்ட ஆதரவாளர் என்று முகமூடி அணிந்திருந்த வைகோ, தன் கட்சியில் உள்ள ஒரு பெண், தமிழர்கள் வந்தேறியென பேசுவதை(பேசவிட்டு) வேடிக்கை பார்த்தவர்.

தமிழர்களை இழிவுபடுத்துவதும், தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதுமே வாழ்நாள் பிழைப்பாகக் கொண்ட வைகோவை, மலேசியாவினுள் அனுமதிப்பது, மலேசிய தமிழர்களை அவமதிக்கும் செயலென தமிழ்ப்புகழ் குறிப்பிட்டார். இதனை பேராசிரியர் இராமசாமி கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதியான அவர் மலேசிய தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வைகோவின் வருகையை புறக்கணிக்க வேண்டுமென்றும் தமிழ்ப்புகழ் கேட்டுக்கொண்டார்.

மேலும் வைகோ போன்றே இன்னும் எண்ணற்ற இந்தியாவை சேர்ந்த பல நபர்கள் மலேசியாவில் தொடர்ந்து பல செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கூட்டம் நச்சுக் கருத்தியலான திராவிடக் கருத்தியலை சுமந்துகொண்டு மலேசியாவில் உலாவுவது, இந்நாட்டின் இறையாண்மைக்கும், மக்களின் நல்லிணக்கதிற்கும் உறுதியாக கேடு விளைவிக்கும் என்று தமிழ்ப்புகழ் சாடினார்.

இவ்வகை நச்சு கிருமிகளை அப்புறப்படுத்த வேண்டுமாயின், இவர்களுக்கு இங்கிருந்து கைகூலி வேலை செய்யும் திராவிட அமைப்புகளை தடை செய்ய வேண்டும். மலேசிய முதன்மை கோட்பாடாக விளங்கும் “இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்” என்பதற்கு நேர் எதிராக விளங்குவது திராவிட கருத்தியலாகும். அதுமட்டுமல்லாது சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், சமூக சீரழிவு சிந்தனைகளை நயவஞ்சகமாக மக்களிடையே புகுத்தி, அச்சீரழிவை அரசியலாக்கி வியாபாரம் செய்வதில் திராவிடம் கைதேர்ந்தது.

இதுபோன்ற பேராபத்தான அமைப்புகள் அரசு பதிவுபெற்று சுதந்திரமாக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்புடனும் உறவாடி, அவர்களை தவறான வழிப்பாதைக்கு இட்டுச் செல்கின்றனர் என்று தமிழ்ப்புகழ் குற்றம் சாட்டினார்.

எனவே வைகோ வருகைக்கான எதிர்ப்பு என்பது, வைகோவை மலேசியாவினுள் அனுமதிக்க கூடாது என்பதுமட்டுமல்லாது, மலேசியாவில் இயங்கும் திராவிட அமைப்புகளையும் தடை செய்யவும் வேண்டும். மலேசிய அரசாங்கத்தின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லவிருப்பதாகவும், தேவைப்படுமானால் நாட்டின் இறையாண்மையை காக்க நீதிமன்றம்வரை செல்லவும் தயங்கப்போவதில்லை என தமிழ்ப்புகழ் குணசேகரன் தனது அறிக்கையில் தெரிவித்துக்கொண்டார்.

(இதற்கு முன் வைகோவை மலேசியாவில் அனுமதிக்க முடியாது என்று மலேசிய காவல்துறையால் கைது செய்ததும், பின் விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், இம்முறை வைகோ வருகையை எதிர்த்து பல புகார்கள் மலேசிய காவல்துறைக்கு கொடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது)

3 thoughts on “மலேசியா வரும் வைகோவிற்கு கடும் எதிர்ப்பு!

  1. நான் தமிழன்

    ஆம் தடை செய்ய வேண்டும்

  2. தென்பாண்டித் தமிழன்

    ஆம் தடை செய்ய வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன