அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி இடைத்தேர்தல்: பிஎஸ்எம் சார்பில் நிக் அசிஸ் போட்டி!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி இடைத்தேர்தல்: பிஎஸ்எம் சார்பில் நிக் அசிஸ் போட்டி!

செமினி பிப்ரவரி 14-

மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் நிக் அசிஸ் (வயது 25) போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.

கடந்த 3 பொதுத் தேர்தல்களில் இத்தொகுதியில் அருட்செல்வம் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் இத்தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு நிக் அசிஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்திருக்கின்றது.

அருட்செல்வம் இத் தொகுதியில் போட்டியிடவில்லை என்றால் அவருக்கு பதிலாக பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இளைஞர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இதன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் அருட்செல்வம், பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் காலிட் சமாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறந்த எதிர்க்கட்சியால் மட்டுமே நாட்டை சிறந்த முறையில் வழி நடத்த உறுதுணையாக இருக்க முடியும். அதை கருத்தில் கொண்டு தம்மை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென நிக் அசிஸ் தமது உரையில் வலியுறுத்தினார்.

எப்படிப்பட்ட எதிர்க்கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஊழலற்ற எதிர்க்கட்சி தான் சிறந்த அடித்தளத்தை அமைக்கும். இன ரீதியாக மக்களை பிரிக்கும் கட்சி எதிர்க்கட்சியாக கூடாது. அதோடு ஊழல் அற்றவர்கள்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதை இரண்டையும் கருத்தில் கொண்டு இத்தொகுதியில் தமது கட்சியின் வெற்றியை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தொகுதியில் பி எஸ் எம் மூன்று முறை போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளது. ஆனால் மக்கள் சேவை மையத்தை இன்றளவும் செயல்படுத்தி வருகின்றது. அதுதான் நாங்கள் மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை நடப்பு மாநில அரசாங்கம் ஆக செயல்படும் நம்பிக்கை கூட்டணி 56 தொகுதிகளில் 51 தொகுதிகளை கொண்டிருக்கின்றது. தேசிய முன்னணி நான்கு தொகுதிகளையும் பிஎஸ்எம் ஒரு தொகுதியையும் கொண்டிருக்கின்றது.

ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கின்றது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் 23,428 வாக்குகளைப் பெற்றார்.
தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ ஜோஹான் அப்துல் அஸீஸ் 14 ,464 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாட் ஷாமிடுர் 6,966 வாக்குகள் பெற்றார். பி எஸ் எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருள்செல்வம் சுப்பிரமணியத்திற்கு 1293 வாக்குகள் கிடைத்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன