அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்குதான்! வீரன் நம்பிக்கை
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்குதான்! வீரன் நம்பிக்கை

செமினி, பிப். 14-

மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) மத்திய செயலவை உறுப்பினர் எம் வீரன் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களிடம் வெற்று வாக்குறுதிகளை வழங்கி அதை நிறைவேற்ற தவறியது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.  மக்களை ஏமாற்றி நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் இப்பொழுது மக்கள் தேசிய முன்னணி பக்கம் திரும்பி விட்டார்கள் என வீரன் கூறினார்.

1ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் 15 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் ஆதரவை தான் தேசிய முன்னணி பெற்றது. ஆனால் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் 40 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் ஆதரவை தேசிய முன்னணி வென்றிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதர இடைத்தேர்தல்களில் கூட இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் தேசிய முன்னணிக்கு திரும்பி விட்டனர் என வீரன் கூறினார். இதே நிலை செமினி சட்டமன்றத் தொகுதியிலும் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக வலை தளங்களில் கூட இந்திய சமுதாயத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதை காணமுடிகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் இனிப்பான வாக்குறுதிகளை வழங்கி அதை நிறைவேற்றாமல் இருக்கின்றார்கள். இவை அனைத்தையும் பிரச்சாரத்தின்போது மஇகா எடுத்துரைக்கும் என அவர் தெரிவித்தார்.

இதர உட்புற பகுதிகளை எடுத்துக் கொள்கையில் செமினியில் வாழும் இந்தியர்களின் நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது என சுட்டிக்காட்டினார். பல பகுதிகளில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் கூட தீர்வு காணப்படவில்லை. தேசிய முன்னணி இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என குறை கூறிய நம்பிக்கை கூட்டணி கடந்த 11 ஆண்டுகளாக சிலாங்கூரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி என்ன செய்தது? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

கடந்த இரண்டு தவணையாக மாநில அரசாங்கத்தை நம்பிக்கை கூட்டணி தன்வசம் கொண்டிருந்தபோதும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு காணவில்லை. இதனால் இந்த இடைத்தேர்தலில் அவர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு நிச்சயம் திரும்பும் என வீரன் நம்பிக்கை தெரிவித்தார்.
செமினி சட்டமன்றத் தொகுதியில் 54,503 வாக்காளர்கள் இதில் 13.3 விழுக்காடு இந்தியர்கள். இத்தொகுதியில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 7062.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன