செமினி, பிப். 14-

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சொந்தமான திடலை பள்ளியிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி அப்பள்ளியின் பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

இதில் அப்பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ மதுரைவீரன், மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை அவளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையை கடந்த காலத்தில் தேசிய முன்னணி அரசு முன்னெடுத்ததாக டத்தோ சரவணன் நினைவுகூர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் திடலின் நிலத்திற்கு சொந்தமான சைம் டார்பி நிறுவனத்திடமும் கடந்த அரசு பேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இப்பொழுது 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது அதனால் தமிழ்ப்பள்ளியின் திடல் நிலத்தை அப்பள்ளிக்கு பெற்றுத் தருவது தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் சரவணன் சுட்டிக்காட்டினார்.

செமினியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது இந்த தேர்தலுக்கு முன்னதாக செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

மலேசிய இந்திய காங்கிரசின் நடவடிக்கையால் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலில் 6 வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதோடு மூன்று கணினி அறைகளும் அமைக்கப்பட்டது. பின்னர் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் தமிழ் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது என டத்தோ மதுரைவீரன் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் செமினி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு திடல் மிக அவசியமாக கருதப்படுகிறது. அதன் அவசியத்தை அறிந்து கொண்டு மாநில, மத்திய அரசாங்கம் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டிருக்க முடியாது. உடனடியாக தீர்வு காண்பது தான் மக்களுக்கான சேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதில் மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா, பேரா மாநில தலைவர் டத்தோ இளங்கோ, இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.