வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி ! நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி ! நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான்

செமினி, பிப். 14-

செமினி சட்டமன்றத் தொகுதியை நம்பிக்கைக் கூட்டணியிடமிருந்து மீட்டெடுக்க தேசிய முன்னணி தமது வேட்பாளரான மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியான ஸாகரியா ஹனாபியை அறிவித்துள்ளது.

உலு லாங்காட் அம்னோ தொகுதியின் சார்பில் அடையாளம் காணப்பட்ட 6 நபர்களில் உள்ளூர்வாசியான ஸாகரியா ஹனாபியை (வயது 58) வேட்பாளராக தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் அறிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்த்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு மீண்டும் வாக்களிக்க செமினி மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக வேட்பாளர் அறிமுகத்தில் பேசிய முகமட் ஹசான் கூறினார். தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில பாஸ் ஆணையாளர் சல்லேஹென் முக்தியும் பங்கேற்றார்.

முன்னதாக செமினி சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் உலு லாங்காட் பெர்சத்து கட்சியின் பொருளாளரும் காலம்சென்ற முன்னாள் செமினி சட்டமன்ற உறுப்பினரின் மருமகனுமான முகமட் அய்மான் (வயது 30) வேட்பாளராக நிறுத்தப்படுகின்றார். அதனை அக்கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தாமான் பெலன்கியில் அறிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வழிவிடும் வகையில் பாஸ் கட்சி போட்டியிடவில்லை. மாறாக பிஎஸ்எம் கட்சி போட்டியில் களம் கண்டுள்ளது. அதன் வேட்பாளராக நிக் அசிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கின்றது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் 23,428 வாக்குகளைப் பெற்றார்.
தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ ஜோஹான் அப்துல் அஸீஸ் 14 ,464 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாட் ஷாமிடுர் 6,966 வாக்குகள் பெற்றார். பி எஸ் எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருள்செல்வம் சுப்பிரமணியத்திற்கு 1293 வாக்குகள் கிடைத்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன