செமினி, பிப் 14-
செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப்பெறும் வாய்ப்பு நம்பிக்கைக் கூட்டணிக்கே பிரகாசமாக இருப்பதாக தேர்தல் ஆய்வு மையமான டாருல் ஏசான் கழகம் தெரிவித்திருக்கிறது.

நம்பிக்கை கூட்டணி 46 விழுக்காட்டுடன் முன்னிலை வகிப்பதாக அப்பகுதி மக்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரொய வந்துள்ளது.

இந்நிலையில், தேசிய முன்னணிக்கு 37 விழுக்காட்டினரும், இதர தரப்பினருக்கு 12 விழுக்காட்டினரும், மற்றும் சுயேட்சைக்கு 5 விழுக்காட்டினரும் ஆதரவை வழங்கி இருக்கின்றனர்.

தேசிய முன்னணியிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொண்டிருக்கும் நம்பிக்கை கூட்டணி, மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், அது இன்னும் 51 விழுக்காடை எட்டவில்லை என்பதும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இதனிடையே, 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு தொடங்கும் பிரச்சாரம், வேட்பாளர் தேர்வு மற்றும் அவர்களின் வியூகம் போன்றவற்றை பொறுத்து, மக்களின் எண்ணமும் நம்பிக்கையும் மாறும் என்று டாருல் ஏசான் கழக ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரெட்சுவான் ஒஸ்மாபன் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரையில், அப்பகுதியில் வசிக்கும் மொத்தம்1,442 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அம்னோ பாஸ் கூட்டணியின் ஒத்துழைப்பு, நம்பிக்கை கூட்டணியின் வெற்றிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

சுங்கை கண்டிஸ், ஶ்ரீ செத்தியா, போர்ட்டிக்சன், மற்றும் கேமரன் மலை, ஆகிய இடங்களில் அம்னோவுடன் பாஸ் கட்சி இணைந்து செயலாற்ற தொடங்கிய பின்னர் மக்கள் மத்தியில் இருக்கும் மாற்றத்தைக் கண்டறியும் நோக்கத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளபட்டாதாக அவர் கூறினார்.

செமினி சட்டமன்றம் , 23 மாவட்டங்களில் 53 ஆயிரத்து 257 வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது.

செமினி சட்டமன்ற உறுப்பினர், 57 வயதுடைய பக்தியார் முகமட் நோர், மாரடைப்புக் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

நடந்து முடிந்த கேமரன்மலை இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய முன்னணி அமோக வெற்றிப் பெற்றது. அதே போன்று செமினி இடைத்தேர்தலில் எதுவேண்டுமானாலும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.