இந்திய முஸ்லிம் அமைப்புகள் வைத்த கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை!

0
15

கோலாலம்பூர், ஆக.14-
அண்மையில் பிரிஸ்மா, பெர்மிம், பினாங்கு லீகா முஸ்லிம், ஐக்கிய ஜமாஅத் மற்றும் ஏறத்தாழ 130 அரசுசாரா இந்திய முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், சூராவ்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதமருடனான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் குடும்ப தின விழாவில் மூன்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர்துறை அலுவலகம் முதல் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பெர்மிம் பேரவையின் தலைவர் ஹாஜி தாஜூதீன் தெரிவித்தார்.

அதாவது பூமிபுத்ரா அந்தஸ்து, புத்ராஜெயா அல்லது கோலாலம்பூரில் இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக 15 ஏக்கர் நிலம் வழங்குதல், பிரதமர்துறையில் இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

தற்போது இந்த கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலனை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் அண்மையில் பிரதமர்துறை அலுவலகத்தில் முதல்கட்ட சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த சந்திப்பு எங்களுக்கு மனநிறைவளிப்பதோடு எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கையையும் தந்துள்ளது.

இந்நாட்டிலுள்ள மக்களின் மீது மிகுந்த நம்பிக்கையையும் அக்கறையையும் கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பெர்மிம் பேரவைக்கு ஏற்பட்டுள்ளதாக ஹாஜி தாஜுதீ ன் குறிப்பிட்டார்.