புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > செமினி இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான இந்தியர்களின் வாக்குகள் அதிகரிக்கும் – சம்பந்தன் நம்பிக்கை !
முதன்மைச் செய்திகள்

செமினி இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான இந்தியர்களின் வாக்குகள் அதிகரிக்கும் – சம்பந்தன் நம்பிக்கை !

செமினி, பிப்.18-

வரும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெற விருக்கும் செமினி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான இந்தியர்களின் வாக்குகள் பெருமளவு அதிகரிக்கும் என ஐ.பி.எப் கட்சியின் தலைவர் டத்தோ சம்பந்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் செமினி சட்டமன்றத் தொகுதியில்,   இந்தியர்கள் பெரும்பாலானோர் பாக்காத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு வாக்களித்ததை தாம் மறுக்கவில்லை என அவர் தெரிவித்தார். எனினும் உணர்ச்சிக்கு ஆட்பட்டு அவர்கள் தங்களின் வாக்குகளை பாக்கத்தான் ஹரப்பானுக்கு வழங்கினார்.

ஆனால் இன்று நிலைமை மாறியிருப்பதாக சம்பந்தன் தெரிவித்தார். குறிப்பாக ஆட்சி அமைத்த 9 மாதங்களில் பாக்காத்தான் ஹரப்பான் தேர்தல் சமயத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது. டோல் கட்டணங்களை அகற்றுவோம் என கூறினார். ஆனால் இன்று செமினிக்கு வர வேண்டும் என்றால் குறைந்தப் பட்சம் ஐந்து ரிங்கிட்டுக்கு மேல் டோல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆட்சி அமைத்தால் எண்ணெய் விலை குறையும் என்றார்கள். ஆனால் தேசிய முன்னணி கடைப்பிடித்த அதே வழிமுறையைப் பின்பற்றி விலையை நிர்ணயிக்கின்றனர். பி.டி.பி.டி.என் கடனுதவி, இந்திய சமூகத்துக்கான உதவிகள் என பல்வேறு வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.

பாக்காத்தான் ஹரப்பான் மீது நம்பிக்கை வைத்த இந்திய வாக்காளர்கள் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். அது செமினி இடைத் தேர்தலில் நிரூபிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். செமினியில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இன்று எதிர்கட்சியாக இருந்தாலும் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான ஐ.பி.எப்  , செமினியில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருவதையும் சம்பந்தன் சுட்டி காட்டினார்.

செமினி இடைத் தேர்தலில் ஐ.பி.எப் கட்சி இரண்டாயிரம் வாக்குகளைத் தேசிய முன்னணி வசம் கொண்டு சேர்க்கும் என அவர் உறுதியாக கூறினார். குறிப்பாக செமினியில் உள்ள ஐ.பி.எப் கட்சியின் இரண்டாயிரம் உறுப்பினர்களும் தேசிய முன்னணிக்கு வாக்குகளை கொடுப்பார்கள் என அவர் கூறினார்.

செமினியில் ஏழாயிரத்து 62 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இதில் நான்காயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தேசிய முன்னணிக்குக் கொண்டுச் செல்ல ஐ.பி.எப் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

உலு லாங்காட் ஐ.பி.எப் தொகுதியின் மகளிர் பிரிவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அநேகனிடம் பேசிய சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஐ.பி.எப் வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு அந்த பட்டியல் மகளிர் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன