ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ரந்தாங் இடைத்தேர்தலில் ஶ்ரீராம் போட்டியிடுவரா? பல்டி அடித்தார் அஸ்மின் அலி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ரந்தாங் இடைத்தேர்தலில் ஶ்ரீராம் போட்டியிடுவரா? பல்டி அடித்தார் அஸ்மின் அலி

சிரம்பான், பிப். 19-

நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பொருத்தமான வேட்பாளரை நம்பிக்கைக் கூட்டணி விரைந்து தேர்ந்தெடுக்குமென பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறியிருக்கின்றார். இதன் மூலம் டாக்டர் ஶ்ரீராம் தான் வேட்பாளர் என்பது தற்போது உறுதியில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் நம்பிக்கைக் கூட்டணி இந்திய தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

அத்தொகுதியை தேசிய முன்னணியிடமிருந்து பறிப்பதற்கான வியூகங்களையும் நம்பிக்கைக் கூட்டணி வகுக்கும் என சிலாங்கூர், செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் ஹிலிரில் திங்கட்கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

14ஆவது பொதுத் தேர்தலில் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய அம்னோ தலைவரான டத்தோஶ்ரீ முகமட் ஹசான் பெற்றிருந்த வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளித்திருந்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து முகமட் ஹசான் செய்திருந்த மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமனறம் நிராகரித்ததுடன் அவரின் வெற்றி செல்லாது என்றும் நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து, நேற்று தொடங்கி 30 நாட்களுக்கும் ரந்தாவ் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த பொதுத் தேர்தலில் ரந்தாவ் தொகுதியில் போட்டியிட பிகேஆர் சார்பில் டாக்டர் ஶ்ரீராம் வேட்புமனு தாக்கல் செய்யவிருந்தார். ஆனால் அவரை உள்ளே விடாததால், போட்டியின்றி முகமட் ஹசான் வெற்றி பெற்றார். அதை எதிர்த்து ஶ்ரீராம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இத்தொகுதியில் தேர்தல் நடந்தால், ஶ்ரீராம் தான் வேட்பாளர் என பிகேஆர் கூறியிருந்தது. ஆனால் இப்போது ரபிஸி ரம்லியை வேட்பாளராக நிறுத்துவதற்கு அக்கட்சி முடிவு செய்திருப்பதாக செய்திகள் கசிகின்றன, இதனால் ஶ்ரீராம் ரந்தாவ் தொகுதியில் போட்டியிடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன