மின்தூக்கிக்குள் பெண் தாக்கப்பட்ட சம்பவம்; சந்தேக நபர் கைது

0
8

கோலாலம்பூர், பிப் 19-

செராஸ், தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலைய மின்தூக்கிக்குள், ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிப்ரவரி 25ஆம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு அச்சந்தேக நபரை தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர், ஏசிபி முகமட் மோக்சேய்ன் முகமட் சோன் தெரிவித்துள்ளார்.

26 வயதான அச்சந்தேக நபர், நேற்று திங்கட்கிழமை இரவு 8.10 மணியளவில் தாமான் செராசில் கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 34இன் கீழ் அந்த ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை, செராஸ், தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலைய மின்தூக்கியில், 48 வயதான பெண் ஒருவரிடமிருந்து கொள்ளையடிக்க, இச்சந்தேக நபர் அவரைக் குத்தியதோடு, சில முறை அவரை உதைத்தும் இருக்கிறார்.

காலை 6.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தேக நபர் முதலில் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்.

அப்பெண் மின்தூக்கியில் தனியாக நுழைவதைக் கண்ட அவர், அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, அப்பெண்ணைத் தாக்கியதோடு, அவருடைய பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறார்.

ரகசிய காமிராவில் ஒளிப்பதிவான அச்சந்தேக நபர் மனிதாபிமானம் இன்றி அப்பெண்ணை அடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.