சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் > உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகி நிற்கும் தமிழ்மொழிக்கு அன்பு தாய்மொழி தின வாழ்த்து..!
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகி நிற்கும் தமிழ்மொழிக்கு அன்பு தாய்மொழி தின வாழ்த்து..!

ஒலியாகப் பிறந்து..

மொழியாகத் திரிந்து..

சுதந்திரமாப் பறந்து..

கல்வெட்டுகளில் உராய்ந்து..

செப்பேடுகளில் மறைந்து..

ஓலைச் சுவடிகளில் தோய்ந்து..

காலம் பல கடந்து

நீடூழி நிற்கும் தமிழ்த் தாயிக்கு ஒரு தினம்

இன்று உலகத் தாய் மொழி தினம்..!

இன்று உலகத் தாய்மொழி தினம் என்று தெரிந்திருக்கும் எனில் தமிழை வெறும் வார்த்தையாக மட்டுமின்றி, மொழியாக, ஒளியாக, வாழ்வாக, சுவாசமாக நினைக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் அனேகன்.காமின் அன்பு வாழ்த்து.

தாய்மொழி ஓர் இனத்தின் அடையாளம். அந்த அடையாளமானது பண்பாடு,கலாசாரம்,வாழ்க்கை முறை, சிந்தனை என்று அனைத்து ரீதியிலும் பங்காற்றுகிறது. உலகில் இருக்கும் அனைத்து மொழியாளர்களும் தங்களின் தாய்மொழியைச் சர்வதேச ரீதியில் உரிமையாகக் கொண்டாடி மகிழ இந்நாள் கொண்டாடப்படுகிறது.

1952-ம் ஆண்டு இந்த நாளன்று அன்றைய கிழக்குப் பாகித்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

யுனெசுக்கோ நிறுவனத்தால் 1999, பிப்ரவரி 21 பொது மாநாட்டின் 30-வது அமர்வில் இந்நாளை அனைத்துலகத் தாய்மொழி நாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கு இடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது.

மொழியாலும் ஒளியாலும் எண்ணாலும் எழுத்தாலும் தொன்மையில் மேன்மையைக் கொண்டிருக்கும் தாய்மொழியான தமிழைக் ஆசையாய் உரிமையாக் கொண்டாடி நிற்கும் நாளும் இதுவே.

தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என கொண்டாடுகிறோம். தமிழ்மொழி பக்திமொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப் பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.

இத்தனை மகிமை பெற்ற செம்மொழியை எத்தனை பேர் இன்று போற்றுகிறோம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அன்னை மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து வருவது வருத்தமான செயல்பாடாகவே காணப்படுகிறது.

பழைமையும் தொன்மையும் நிறைந்த தமிழனத்தின் மாண்புகள் இன்றுவரை பிற இனத்தவராலும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மேலை நாடுகள்கூட இன்று தமிழினத்திற்கும் தமிழருக்கும் தனியொரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கி வருவது நமக்குக் கிடைத்த பெருமையாகும்.ஆனால் அப்படி வானளாவ போற்ற வேண்டிய செம்மொழியை இன்று பலரும் பேச வெட்கப்படுகின்றனர். நம் நாட்டில் பேச்சு வழக்கு தமிழ்மொழியைக்கூடப் பலர் இன்னமும் அறிந்து வைத்திருக்காதது வேதனையளிக்கிறது.

வீட்டிற்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்ற காலம் மாறி, தாய்மொழியை வாழவைக்க இன்று வீட்டிற்கு ஒரு பிள்ளையாவது தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது இந்தியர்களுக்கு ஒரு கோரிக்கையாகவே முன்மொழொயப்பட்டு வருகிறது.

ஓர் இனத்தின் அடையாளமாகவும் அச்சாணியாகவும் இருக்கும் தமிழ் மொழியும் தமிழ்ப் பள்ளிகளும் காலத்தால் அழிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. மொழிப் பற்று என்பது தமிழர்களின் மனதில் இயல்பாகவே இருக்க வேண்டிய ஓர் உணர்வாகும். ஆனால், அதிகமான பெற்றோர்கள் தமிழ் மொழியைக் காட்டிலும் மலாய் மற்றும் ஆங்கில மொழியின் மீது கொண்டிருக்கும் மோகத்தால் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கின்றனர்.

அன்னை மொழியைப் புறக்கணித்துப் பிள்ளைகளின் இயல்பான சிந்தனையைச் சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அறிவியலில் அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்தினார்கள்.

தமிழ்மொழிக்கு அங்கீகாரம் இருக்கிறதா? என்று இப்படிப் பல கேள்விகளைக் கேலியாகக் கேட்டு சிலர் பொது இடங்களில் தாய்மொழியான தமிழைத் தாழ்த்தி பேசுவது வருத்தத்தை அளிக்கிறது.

நாட்டில், தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளமாகத் தமிழ்மொழி விளங்குகிறது. அந்தக் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப்பள்ளிகள்தான். தமிழ்ப்பள்ளிகளில் கல்வி மட்டுமே போதிக்கப் படுவதில்லை. மாறாக, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமயம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

எனவே, செம்மொழியின் மதிப்பை அடுத்தத் தலைமுறையும் அறிந்திருக்க எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இனிய தமிழ்ச்சொற்களைப் பேசியும், எழுதியும் நம் மொழியைக் கொண்டாடுவோம். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. நம் இனத்தின் அடையாளம். நமக்கான அடையாளத்தைத் தொலைக்காதிருப்போம் நாமும் தொலையாதிருப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன