ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினியில் 3000 இந்திய வாக்காளர்களை மஇகா வென்றெடுக்கும்! – டத்தோ அசோஜன் நம்பிக்கை
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினியில் 3000 இந்திய வாக்காளர்களை மஇகா வென்றெடுக்கும்! – டத்தோ அசோஜன் நம்பிக்கை

செமினி, பிப். 22-

செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் 3,000 இந்திய வாக்காளர்களை தேசிய முன்னணிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) ஈடுபட்டுள்ளது. இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை சந்தித்து விட்டோம் அதனால் தேசிய முன்னணி இம்முறை கணிசமான அளவு இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் என மஇகாவின் நிர்வாக செயலாளர் டத்தோ அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

செமினி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் உயர்மட்ட தலைவர்களில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடுபடுகிறார்கள் என அவர் கூறினார்.

கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்த தேர்தல் நடவடிக்கைக்கு தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன். கட்சியின் 3 உதவி தலைவர்களான டத்தோ டி மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ முருகையா ஆகியோர் தலா நான்கு குழுவிற்கு தலைமை ஏற்று உள்ளார்கள்.

செமினி வட்டாரத்தில் உள்ள இந்திய வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்து வீடுவீடாக களமிறங்கி அவர்களின் ஆதரவை திரட்டி வருகிறோம் என குறிப்பிட்டார். ம இ கா தலைமையகத்தை பொருத்தவரையில் செமினியில் மட்டும் மஇகாவைவின் உறுப்பினர்கள் மொத்தம் 3,000 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த ஓட்டுக்களையும் தேசிய முன்னணிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தைப் போல் இல்லாமல் இப்போது மக்கள் தெளிவான நிலையில் இருக்கின்றார்கள். 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை நம்பிக்கை கூட்டணி ஏமாற்றி இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றார்கள். இதை நேரடியாக அவர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் போது அறிந்து கொண்டதாகவும் அசோஜன் கூறினார்.

டோல் சாவடி அகற்றப்படும், பெட்ரோல் விலை 1. 50 காசாக நிலைநிறுத்தப்படும், கல்விக்கடன் உதவி ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதிகள் இளைய சமுதாயத்தை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இப்போது எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாமல் நம்பிக்கை கூட்டணி இருப்பதால் இளைஞர்களும் அந்த அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றார் அவர்.

இத்தொகுதியை பொறுத்தவரை தேசிய முன்னணி அனுபவம் பெற்ற தரமான வேட்பாளரை களமிறக்க இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக சிறப்பாக உள்ளது என அசோஜன் கூறினார். தேர்தல் நடவடிக்கை குழு அறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் சிலாங்கூர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் எம்.பி.ராஜா, உலு லங்காட் தொகுதி தலைவர் டாக்டர் செல்வா, துணைத்தலைவர் ராசசெல்வம், செயலாளர் டத்தோ மதுரைவீரன், பொருளாளர் பன்னீர்செல்வம், மத்திய செயலவை உறுப்பினர் குணசீலன், மதுரைவீரன் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன