சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் பெண்களின் வளர்ச்சி குறைந்து விட்டது! – ஐபிஎப் மகளிர் தலைவி ராஜம்மா சாடல்
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் பெண்களின் வளர்ச்சி குறைந்து விட்டது! – ஐபிஎப் மகளிர் தலைவி ராஜம்மா சாடல்

செமினி, பிப். 22-

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் தனித்து வாழும் தாய்மார்கள் உட்பட பெண்களின் கை தொழில் மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என ஐபிஎப் கட்சியின் தேசிய மகளிர் பிரிவு தலைவி ராஜம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் பலதரப்பட்ட கடனுதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இதில் இந்திய பெண்களும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக பிரத்தியேக கடன் உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளது என ராஜம்மா தெரிவித்தார்.

கப் கேக் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட பெண்களுடன் ராஜம்மா மற்றும் ஐபிஎப் மகளிர் பிரிவினர்

இதனிடையே செமினி தொகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு கப் கேக் செய்யும் நடைமுறையை போதிக்கும் பயிற்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் ஒரு சமுதாயம் மேம்பாடு காணும் போதுதான் அச்சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதை கருத்தில் கொண்டுதான் கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் பொருளாதார ரீதியில் ஒரு சமுதாயத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்பது குறித்த செயல் திட்டங்களை முன்னெடுத்து. ஆனால் இப்பொழுது நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருக்கின்றது என்ற காரணத்தை கூறி பொருளாதார ரீதியில் மேம்பட கூடிய அனைத்து வாய்ப்புகளையும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தடுத்து நிறுத்தி உள்ளது என குற்றம் சாட்டினார்.

ராஜம்மா உரையாற்றியபோது

இருப்பினும் தேர்தலில் தேசிய முன்னணி அரசு ஆட்சி அதிகாரத்தை இழந்த போதும் ஐபிஎப் கட்சி இந்திய சமுதாயத்திற்கான சேவைகளை நிறுத்தவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ரீதியில் பெண்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பலதரப்பட்ட பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருவதாக அவர் கூறினார். இதில் பயிற்சி பெற்ற மகளிர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்கின்றது என்பதை ராஜம்மா தெரிவித்தார்.

கப் கேக் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள்…

உலு லங்காட் தொகுதியை பொறுத்தவரை ஐபிஎப் மிக பலம் பொருந்திய கட்சியாக விளங்குகின்றது. அதனால் இங்குள்ள பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு எங்களால் முடிந்த செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தற்போது செமினி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதனை ஒட்டி 5 பயிற்சித் திட்டங்களை நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்த வாக்காளர்கள் இந்த முறை தேசிய முன்னணி பக்கம் திரும்பி இருக்கிறார்கள். குறிப்பாக பெண் வாக்காளர்கள் தங்களின் மேம்பாட்டிற்கு இந்த அரசாங்கம் எந்த நல திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பதை அறிந்து இருக்கின்றார்கள். அதனால் இந்த இடைத்தேர்தலில் அவர்களின் வாக்கு தேசிய முன்னணிக்கு கணிசமாக கிடைக்கும் என ராஜம்மா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன