சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செமினி இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு? பிரச்சாரம் தீவிரமடைந்தது!
அரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு? பிரச்சாரம் தீவிரமடைந்தது!

(அரசியல் விமர்சகர் பார்வையில்)

மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த பக்தியார் முகமது நோர் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.

இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி , பிஎஸ்எம் கட்சி மற்றும் சுயேட்சையும் போட்டியிடுகின்றனர். இதற்கு முன் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்த செமினி சட்டமன்றத் தொகுதியை கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதிநடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் முதல்முறையாக நம்பிக்கை கூட்டணி கைப்பற்றியது.

நம்பிக்கை கூட்டணியின் உறுப்பு கட்சியான பெர்சத்துவின் பக்தியார் முதல்முறையாக 14ஆவது பொதுத் தேர்தலில் செமினி தொகுதியை கைப்பற்றினார். இப்போதைக்கு நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் தீவிரமாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு வேட்டையாடினாலும் இவ்விரு கட்சிகளில் எது செமினி தொகுதியை கைப்பற்றும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தொகுதியை கைப்பற்றுவதற்கு பாஸ் கட்சியின் ஆதரவு அம்னோவுக்கு மிகவும் அவசியமாகும் . ஆனால் பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹடி அ வாங் மற்றும் அதன் உயர்மட்ட தலைவர்கள் அண்மையில் பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீருடன் பேச்சு நடத்தியதால் இந்த இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு திட்டவட்டமாக அம்னோ அல்லது தேசிய முன்னணிக்கு இருக்குமா என்ற கேள்விக்குறி இப்போதும் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு இருந்ததால் அந்த தொகுதியை தேசிய முன்னணி வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது.

அதேவேளையில் கேமரன் மலை இடைத்தேர்தலின் போது பாஸ் கட்சி வழங்கிய ஆதரவை போன்று செமினி இடைத்தேர்தலில் இருக்காது என ஹடி அவாங் கூறியிருந்த தகவல் தேசிய முன்னணி உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பாக அதன் உயர்மட்ட தலைவர்களிடையே சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்த போதிலும் தேர்தல் பரப்புரைகளில் அம்னோ தலைவர்களுடன் சேர்ந்து பாஸ் தலைவர்களில் சிலர் ஈடுபட்டு வருவதை செமினி வட்டாரங்களில் காணமுடிகிறது. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு மற்றும் அதிருப்தி வாக்காளர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையை தேசிய முன்னணி சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு தனது தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது. தேசிய முன்னணிக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் செமினி யில் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவைத் திரட்டி வருகிறார் . அவர் கலந்துகொள்ளும் தேர்தல் பரப்புரைகளில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.

நஜிப்பிற்கு வரும் கூட்டத்தை பார்க்கும் போது மக்களின் அல்லது வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு இருப்பது போன்ற ஒரு தோற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொகுதி மக்களின் நலன் மீது அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட வேட்பாளருக்கு மட்டுமே தங்களது ஆதரவு இந்த இடைத்தேர்தலில் இருக்கும் என வாக்காளர்கள் பலர் கருத்துரைத்துள்ளனர்.

எனவே அடுத்த சில நாட்களில் வாக்காளர்களை கவர்வதற்கு நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடு படுவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன