கோலாலம்பூர், ஆக. 15-
கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை இரண்டு நாள் உற்சவமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இம்முறை இவ்விழா முதன்முறையாக தங்க ரத ஊர்வலத்துடன் கொண்டாடவிருப்பதாக தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
50 லட்ச வெள்ளி செலவில் உருவாக்கப்பட்ட தங்க ரதமும் தங்க விக்கிரமும் வருகின்ற 24.08.2017, வியாழக்கிழமை முதல் சிறப்பு பூஜைகளுடன் கோலாலம்பூரில் உள்ள கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் விமரிசையாக நடைபெறும். முற்றிலும் பக்தர்களின் நன்கொடைகளாலும் ஆதரவினாலும் இந்த தங்க ரதம் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தயார் செய்யப்பட்ட இந்த தங்க ரதத்தின் மொத்த செலவு 20 லட்ச வெள்ளியாகும். அதோடு, தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லவிருக்கும் 18 கிலோகிராம் எடை கொண்ட விநாயகப் பெருமானின் உற்சவ மூர்த்தி சிலையும் முற்றிலும் தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 30 லட்சம் வெள்ளியாகும். இந்த செலவை விநாயகர் பெருமானின் தீவிர பக்தரான ஒருவர் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
வருகின்ற 24.08.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்திலிருந்து புறப்படும் தங்க ரதம் மதியம் சுமார் 12.00 மணியளவில் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலை வந்தடையும். மாலை 4.00 மணிக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம், தீபாரதனைக்கு பின்னர் மாலை 6.30 மணிக்கு விநாயகர் சதுர்த்தி மகோற்ச கொடியேற்று வைபவம் நடைபெறும்.
பின்னர் இரவு மணி 7.00க்கு விநாயகர் பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளி தங்க இரத, தங்க விக்கிரக ஊர்வலமாக அக்கோயிலிருந்து புறப்படுவார். தங்க ரதம் பிள்ளையார் கோயிலிருந்து புறப்பட்டு ஜாலான் புடு, லெபோ அம்பாங், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் சுல்தான் அப்துல் சமத், லிட்டல் இந்தியா ஆகிய சாலைகள் வழியாக வரும். அதன் பிறகு, ஜாலான் துன் சம்பந்தனிலிருந்து ஜாலான் புடு, ஜாலான் புடு லாமா முதலான சாலைகள் வழியாக வந்து கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலை வந்தடையும்.
மறுநாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி உற்சவம் வழக்கம் போல் விமரிசையாக நடைபெறும். தங்க ரத ஊர்வலம் செல்லும் சாலைகளில் திரளும் பக்தர்களும் பொதுமக்களும் தங்க ரதத்தை வரவேற்று வழிபட்டு அருள் பெறுமாறு கேட்டுக்கொள்வதாக டான்ஸ்ரீ ஆர்.நடராஜா குறிப்பிட்டார்.
