கோலாலம்பூர், மார்ச் 4-
பரதநாட்டியத்தில் தெய்வீக தன்மையும் புராண இதிகாசமும் கலக்கும்போது அது தனிச் சிறப்பு பெறும் என்பதற்குச் சான்றாக விளங்கியது தலைநகரில் அரங்கேறிய பரதநாட்டிய பெருவிழா.
ஈப்போ சுவாரலாயா சங்கீத கலாலயத்தின் ஆதரவில் மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்த இந்த நாட்டிய விழாவில் இப்பள்ளியைச் சேர்ந்த 7 மூத்த மாணவர்களோடு இதன் ஆசிரியர் டாக்டர் பண்பரசியும் நடனமாடியது விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

‘பன்னிசைமணி’ டாக்டர் பண்பரசியின் சிந்தனையில் மலர்ந்த இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி பேராக், தாப்பாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சத்குரு ஜெகநாதர் சுவாமி ஆசிரமத்தின் கட்டுமானப் பணிக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.
தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸ், கலா மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்நாட்டிய விழாவிற்கு மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர். எஸ். மோகன் ஷான் சிறப்பு வருகை புரிந்தார்.

டாக்டர் பண்பரசி கோவிந்தசாமியின் சீரிய நடன அமைப்பில் உருவான இந்நிகழ்ச்சியில் இவருடன் கலையரசி ஜீவா, கலைமதி ரமேஷ், திரிகா கிரிஷ்ணன், தர்ஷினி ஜீவா, ஷர்மிளா வேலுசாமி, திவ்யாஸ்ரீ ரமேஷ் மற்றும் சதீஷ் ராஜ்பழனிசாமி ஆகிய மாணவர்கள் தங்களின் திறனை முழுமையாக வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது.
தனது நடனமணிகள் வாயிலாக இந்நாட்டிய நிகழ்ச்சியில் திருமுறை, சிவதாண்டவம், மகிஷாசுரமர்தினி, பாரதியார் கவிதைகள் மற்றும் திருப்புகழ் போன்றவற்றை பரத காவியங்களாக உருமாற்றி அவற்றிற்குத் தக்க ஒளியமைப்பும் நடன அமைப்பும் கொடுத்து உயிரோட்டம் பெறச் செய்த டாக்டர் பண்பரசியை அவசியம் பாராட்ட வேண்டும்.
நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்பட்ட “இன்னிசை வாணி” கனிமொழி கோவிந்தசாமி சில பாடல்களுக்குக் குரல் கொடுத்தார்.

இவ்விழாவில் சுவாரலாயா சங்கீத கலாலயத்தின் தோற்றுனரான ‘ சமய சேவகர்’ ஸ்ரீமதி சரோஜினி கோவிந்தசாமி, மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கந்தசாமி, மலேசிய பரதநாட்டிய சபாவின் தலைவர் திருமதி குமுதினி சிவநாதன், நட்டுவத் திலகம் இந்திரா மாணிக்கம், சங்கபூஷன் கணேசன் உள்பட சுற்று வட்டார கலை மற்றும் சமய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

