கோலாலம்பூர். மார்ச் 4-

தேசிய முன்னணியில் இருந்து மஇகாவும் மசீசவும் விலகுவதற்கு முடிவு செய்துள்ளன. அவ்விரு கட்சிகளும் திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு காணப்பட்டதாக ம.இ.கவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ, விக்னேஸ்வரனும் ம. சீ ச தலைவர் டாக்டர் வீ கா சீயோங் வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனை தெரிவித்தனர்.

பல்வேறு இனங்களைக் கொண்ட மலேசியாவில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நமது தலைவர்கள் தேசிய முன்னணியை தோற்றுவித்தனர். ஆனால் இந்த கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுப்புக் கட்சியின் தலைவர்களின் பேச்சும் செயல்பாடும் வெவ்வேறாக இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் விக்னேஸ்வரனும் வீ கா சியோங்கும் சுட்டிக்காட்டினர்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியின் தலைவர்களிடையே ஒத்துழைப்பு, பொறுப்புணர்வு மற்றும் ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்து நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்கச் செய்யும் உன்னத நோக்கமும் தேசிய முன்னணி உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஆனால் இந்த நோக்கம் இப்போது தே.முவின் சில தலைவர்களால் திசைமாறிச் செல்கிறது.

புதிய கூட்டணி உருவாக்கத்திற்காக தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டுமென ஏற்கெனவே ம.சீ.ச தனது பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  அதோடு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானதாகும் என்பதையும் அந்த கூட்டறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த நியமனத்தை ம.இ.கா. மற்றும் ம.சீ.ச. அங்கீகரிக்கவில்லை. செமினி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது நஸ்ரி குறிப்பிட்ட கருத்துக்கள் தேசிய முன்னணியை தோற்றுவித்த முன்று முக்கிய கட்சிகளுக்கிடையே மேலும் மோசமான பிளவையும் ஏற்படுத்திவிட்டது. எனவே தேசிய முன்னணியிலிருந்து ம.இ.காவும் ம.சீ.சவும் விலகுவதாக டத்தோஸ்ரீ வீ கா சியோங் மற்றும் செனட்டர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினர்..