கோலாலம்பூர், ஆக. 15-

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சபையின் ஏற்பாட்டில் 2ஆவது ஆண்டாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தக மாநாடு, விருது விழா நடைபெறவுள்ளது. செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கோலாலம்பூர் பேங்க் ராக்யாட் மாநாட்டு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது என மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஜமருல் கான் எம்.எஸ்.கடிர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த இரண்டு நாள் விழாவில் வர்த்தக கண்காட்சி கூடமும் இடம் பெறுகின்றது. இதை சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 60 கூடாரங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் அதில் 50 விழுக்காடு இந்திய முஸ்லிம்களுக்கும் இதரவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

இரண்டு நாட்கள் இந்த விழா நடைபெறுவதால் 10,000த்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக கே.எல்.சென்ட்ரல் அருகிலும் பொது போக்கு வரத்து வசதியும் உள்ள இடத்தில் இந்த விழா நடைபெறுவதால் பொது மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். இதுவரையில் 20 கூடாரங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, காலை 9 மணி தொடங்கி இரவு 7 மணி வரை வர்த்தகம் செய்ய இந்த கூடாரங்கள் வழங்கப்படுகின்றது என்றார் அவர்.

முன்னதாக செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 7.30க்கு விருது விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் 20 பேருக்கு விருது வழங்கப்படுகின்றது. குறிப்பாக இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாகவும் டத்தோ ஜமருல் தெரிவித்தார். பல்வேறு வர்த்தக துறையில் சாதித்த இந்திய முஸ்லிம்களை அடையாளம் கண்டு அவர்களில் சிறந்தவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் 1,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்பதோடு விருதுகளையும் எடுத்து வழங்குகிறார்.

இதனிடையே, செப்டம்பர் 16ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சிறு மற்றும் நடுத்தர வர்த்தக மாநாடு நடைபெறும். இதில் புகழ்பெற்ற வர்த்தகர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஏர் ஆசியா தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் , டான்ஸ்ரீ பாலன், டத்தோஸ்ரீ இக்பால் என பல புகழ் பெற்ற வர்த்தகர்கள் தங்களின் அனுபவத்தையும் கருத்துகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு www.mimcoin.org, அல்லது 03-−77726800 / 019−3137916என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.