புத்ரா ஜெயா, மார்ச் 8-

நாடு மட்டுமல்லாது உலகளாவிய மேம்பாட்டிலும்  பெண்கள்  இன்றியமையாத  பங்கை ஆற்றி  வருகின்றனர். ஒரு நாட்டின்  சமூக, பொருளாதாரம்,கல்வி மற்றும்  கலாச்சார மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டு மொத்தத்தில் நாட்டின் மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பு போற்றத்தக்கது என்று  வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் நீடித்த மற்றும் நிலையான மேம்பாடு என்பது அந்நாட்டின் புற வளர்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, சமூக வளப்பம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும்   உள்ளடக்கியுள்ளது என்று உலகளாவிய நிலையில் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மேம்பாட்டு திட்டமும் எந்தவொரு தரப்புக்கும் தீங்கு இழைக்காமல் இருப்பதும் இப்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு  நன்மையளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே வேளையில், ஒவ்வொரு கொள்கை மற்றும் செயல்திட்ட உருமாற்றத்திலும் இரு பாலரையும் சம அளவில் ஈடுபடுத்தும் நோக்கத்தில், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கையிலும் மகளிர் விடுபடாமல் இருப்பதை அமைச்சு உறுதி செய்துள்ளதை அமைச்சர்  சுட்டிக் காட்டினார்.

மேலும், சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மகளிரின் நேரடி பங்களிப்பு இருப்பதும் உறுதி செய்யப்படும் என்றார் ஜூரைடா.