அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்

கோத்தா பாரு மார்ச் 18-

கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் இந்த செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது வந்திருந்த போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.

செம்மொழி சங்கமம் சொற்போர் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினர்கள்…

வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பற்று இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய உறுதுணையாக அமைந்தது. இதுவரையில் கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இந்திய அமைப்புகள் கலை சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தி வந்தனர். இதனிடையே தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் போட்டியை நடத்துவதற்கு தாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவ்வமைப்பின் தலைவர் வினோதா யோகரத்தினம் கூறினார்.

முதல் பரிசை வென்ற அக்னி சிறகுகள் அணி

இப்போட்டியில் 6 பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்து 12 குழுக்கள் கலந்து கொண்டன. இதில் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அக்னி சிறகுகள் என்ற குழு முதல் பரிசை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு 2000 வெள்ளி ரொக்கமும் சூழல் கிண்ணமும் வழங்கப்பட்டது. இக்குழுவின் சர்வேஸ்வரன் கணேசன், சுரேந்தர் குணாளன், சுகுணன் சித்திரன், ரெமன்நாத் ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இரண்டாம் பரிசை வென்ற காணு கௌரவர்கள் அணி.. சிறந்த பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாரணிதேவி

இப்போட்டியின் இரண்டாம் நிலை வெற்றியாளராக மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் காணு கௌரவர்கள் எனும் அணி தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்குழுவில் ஹேமராஜ் முருகன், தாரணி தேவி கந்தசாமி, திவினேஷ்குமார் காளியப்பன், ஜீவிதா தர்மலிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

“அரசியல் மாற்றம் நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும்” என்ற தலைப்பில் இந்த இரண்டு குழுக்களும் வாதிட்டனர். இப்போட்டியின் வெற்றியாளர் கிண்ணத்தை மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அக்னி சிறகுகள் என்ற அணி வெற்றி கொண்ட நிலையில் சிறந்த பேச்சாளராக மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாரணி தேவி கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செம்மொழி சங்கமம் சொற்போர் போட்டியின் நீதிபதிகள் குழு

இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 1,200 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் மலேசிய வட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடாரம் அணி மூன்றாம் நிலை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்குழுவில் லோகேஸ்வரன் செல்லதுரை, உதய தர்ஷினி சுரேஷ்குமார், விக்னேஷ்வரி கோபால், நாகேஸ்வரி பரமசிவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சொற்போர் போட்டியின் நடுவர்களாக, அநேகன் இணையத்தள பதிவேட்டில் ஆசிரியர் தயாளன் சண்முகம், பெர்னாமா தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் ஜமுனா வேலாயுதம், பேச்சாளர் ஜெகதீசன், வழக்கறிஞர் சக்தி, பேசு தமிழா பேசு போட்டியின் வெற்றியாளர் உமாபரன், திலீப்குமார் அகிலன், தேவேந்திரன் சுகுமார் ஆசிரியர்களான சுப்ரமணியம், தாட்சாயனி முரளி, சர்மினி விஜயன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், வருங்கால மருத்துவர்கள் தமிழ் சார்ந்த போட்டியை முன்னெடுத்து வருங்கால சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளில் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஈடுபட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும் கூட. இவ்வேளையில் இப் போட்டியை சிறப்பாக ஏற்று நடத்திய ஏற்பாட்டுக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன