அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பணியாளர்களே வேலையை விட்டு செல்வதற்காக ஊதியம் வழங்கப்படவில்லையா? மக்கள் ஓசை நிர்வாகம் மீது புதிய சர்ச்சை
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பணியாளர்களே வேலையை விட்டு செல்வதற்காக ஊதியம் வழங்கப்படவில்லையா? மக்கள் ஓசை நிர்வாகம் மீது புதிய சர்ச்சை

கோலாலம்பூர் மார்ச் 18-

மக்கள் ஓசை பணியாளர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. இதனால் அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், பெரும் பாதிப்பை சந்திப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன.

மக்கள் ஓசை நாளிதழில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்ட பிறகு அங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் பரவுகின்றன.

ஊதியத்தை தாமதமாக வழங்கினால் மாதத் தொடக்கத்தில் பல்வேறான சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதை உணரும் ஊழியர்கள் அவர்களாகவே பணியிலிருந்து விலகி விடுவார்கள். அதனால் ஊதியத்தை தாமதப்படுத்தும் நடவடிக்கை தொடர்வதாக அநேகன் இணையத்தள பதிவேட்டிவிற்கு கிடைத்த தகவல் கூறுகின்றது.

தமிழ்ப்பத்திரிக்கை துறையை எடுத்துக்கொண்டால் தமிழ்நேசன் மிகவும் பழமை வாய்ந்தது. அண்மையில் குறிப்பாக ஜனவரி மாத இறுதி முதல் தமது பணியை தமிழ்நேசன் நிறுத்திக் கொண்டது. தற்போது மக்கள் ஓசை நாளிதழில் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் நிறுவனமும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இந்நாட்டின் நாளிதழ் விற்பனை துறையைப் பொருத்தவரை மலேசிய நண்பனுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் நாளிதழாக மக்கள் ஓசை விளங்குகின்றது. இந்நிலையில் அந்நிறுவனம் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்க வாய்ப்பில்லை,

சிறந்த பொருளாதார நிலையைக் கொண்டிருக்கும் மக்கள் ஓசை ஏன் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க மறுக்கிறது? என்று கேள்வி சமுதாயத்தின் மத்தியில் எழுகின்றது.

இன்று மார்ச் 18. ஆனால் பிப்ரவரி மாத ஊதியம் இன்னமும் மக்கள் ஓசை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ் சார்ந்த துறைகளில் இந்திய இளைஞர்கள் கால் பதிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து கூறி வருகின்றோம். ஆனால் தமிழ் சார்ந்த துறைகளில் ஊதிய பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மக்கள் ஓசை ஊழியர்களின் நிலைமையை அறிந்து பலர் தங்களின் சமூக தளங்களில் அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு மக்கள் ஓசை நிர்வாகம் என்ன பதில் தரும் என அனைவரும் காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன