கோலாலம்பூர் மார்ச் 19-

மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடரும் என மேலவை தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறான சவால்கள் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் நிலையிலும் நட்புறவு என்பது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழமை காலை சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் தன் சுவான் ஜின்னுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் பல தரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் அதைக் களைவது இரண்டு நாடுகளின்அரசாங்கத்தின் கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இரண்டு நாடுகளில் இருக்கும் தலைவர்கள் நட்புறவைப் பேணுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகருடன் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவை தொடர்ந்து பேணி காப்பது தான் நமது நோக்கம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.