அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > சிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
இலக்கியம்உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

கோலாலம்பூர் மார்ச் 19-

சிக்காகோ நகரில் நடைபெறவிருக்கும் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 1,120 கட்டுரைச் சுருக்கம் கிடைத்திருப்பதாகவும் அவற்றிலிருந்து தகுதியான கட்டுரைகளைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து தெரிவித்தார்.

தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் ஜூலை மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் சிக்காகோ நகரில் நடைபெறும் மாநாட்டில் படைக்கப்படும். அந்தக் கட்டுரையாளர்கள் பட்டியலில் மலேசியர்களும் அடங்குவர் என்றார் அவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இத்தகவலை கூறினார். இந்த முப்பெரும் விழாக்களில் கலந்து கொள்ள மலேசியர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். மலேசியப் பேராளர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணத் திட்டங்கள் இருவகையாகக் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டு விட்டு திரும்புவது, மாநாட்டிற்கு பின்னர் டொரன்டோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய பகுதிகளில் சுற்றுலா மேற்கொண்டு திரும்புவது என இரு வகை திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. இவை தவிர தனிப்பட்ட முறையில் செல்ல விருப்பம் கொண்டிருப்பவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணையோடு பத்தாம் உலக ஆராய்ச்சி மாநாட்டை வட அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இவ்வாண்டு ஜூலை நான்காம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடத்துகின்றன.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தமிழ் பேரறிஞர் மறைந்த தனிநாயக அடிகளார் 1964 இல் தொடங்கப்பட்டது. அதன் துணையோடு இதுவரை ஒன்பது உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதன் முதல் மாநாடு 1966 இல் கோலாலம்பூரில் நடந்தது. தொடர்ந்து 1987, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆறாம் ஒன்பதாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தியது.

இரண்டாம் ஐந்தாம் எட்டாம் மாநாடுகள் தமிழகத்திலும் இதர மாநாடுகள் பாரிஸ் இலங்கை மொரீசியஸ் ஆகிய நாடுகளிலும் நடைபெற்றன. தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய துறைகளில் ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகளை மற்ற ஆய்வாளர்களோடு பகிர்ந்துகொள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் வழிவகுக்கின்றன. அதோடு இம்மாநாடுகளில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழினத்திற்கும் கலைபண்பாட்டு மேம்பாட்டிற்கும் ஒரு பொக்கிஷம் என தாம் கருதுவதாக டான்ஸ்ரீ மாரிமுத்து கூறினார்.

இம்முறை சிக்காகோ மாநகரில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழாவும் சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவும் இணைக்கப்பட்டுள்ளன.

மலேசியப் பேராளர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வதற்கு பொறுப்பாளர்களும் பயண நிறுவனமும் நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டு திரும்ப திட்டமிட்டு இருப்பவர்கள் மாநாட்டு கட்டணம், விமான கட்டணம், தங்கும் வசதி, உணவுகள், கோப்புகள் அனைத்திற்குமாக மலேசிய ரிங்கிட் 10,000 செலுத்த வேண்டும்.

நான்கு நாட்கள் மாநாடு முடிந்து கூடுதலாக 6 நாட்கள் தங்கி சுற்றுலா மேற்கொண்டு திரும்புவர்களுக்கு மலேசிய ரிங்கிட் 16 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் தங்கள் ஆகவே பதிவு செய்து மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் இணையத்தின் வழி தொடர்பு கொண்டு தங்களை அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்க டாலர் 200 செலுத்தி அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அமெரிக்கா மாநாட்டுச் செயலகத்திலிருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும். அந்த அழைப்பை கொண்டுதான் விசாவுக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என டான்ஸ்ரீ மாரிமுத்து தெளிவுபடுத்தினார்.

மேல் விவரங்களுக்கு 03-40447584, 012-2361265 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பதிவுக்கான இணையத்தளம்
Register @www.fetnaconvention.org
www.chicagotamilsangam.org
ww.icsts 10.0rg

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன