மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் தடம். மார்ச் ஒன்றாம் தேதி வெளியீடு கண்ட இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது உலக அரங்கில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகின்றது. அருண் விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக தடம் விளங்குகின்றது. இத்திரைப்படத்தை திரையரங்கில் கண்டு விட்டு வெளியே வந்த மலேசியர்களுக்கு எழுந்த ஒரே கேள்வி இக்கதை மலேசியாவில் நிகழ்ந்ததா? என்பது தான்.

படம் முடியும் தருவாயில் ஆகாஷ் கொலை வழக்கை போல உலகத்தில் எங்கும் இப்படியொரு வழக்கு நடந்து இருக்காது என ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். அதற்கு இல்லை இச்சம்பவம் மலேசியா உட்பட நான்கு நாடுகளில் நடந்துள்ளன என கூறி திரைப்படம் முடிகின்றது.

இதை கேட்டவுடன் நம் புருவங்கள் உயர்வது வழக்கமான ஒன்றுதான். திரையரங்கில் இருந்து வெளியே வந்தவர்கள் உடனடியாக தங்களின் கைப்பேசியை எடுத்து இந்த வழக்கு உண்மையா? என்ற தேடலில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த விடை ஆம் என்பது தான்.

ஒரே கருமுட்டையில் பிறந்த இரட்டையர்கள் (identical twins) பார்ப்பதற்கும் செய்கையிலும் ஒரே குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். தடம் திரைப்படத்தைப் பொறுத்தவரை ஆகாஷ் என்ற நபர் கொல்லப்படுகின்றார். அவரை கொன்றது யார் என்பது தான் வழக்கு? கவின் – எழில் என்ற இரண்டு இளைஞர்கள் தனித்தனியாக கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.

இருவரில் யார் குற்றவாளி என கண்டுபிடிப்பதில் போலீஸ் பல்வேறு சவால்களை சந்திக்கின்றது. உடல் கூறு டிஎன்ஏ இருவருக்கும் ஒரே மாதிரி பொருந்துவதால் யார் குற்றவாளி என கண்டுபிடிக்க முடியவில்லை. கைரேகை பதிவும் அழிந்து போய்விட எப்படி குற்றவாளியை அடையாளம் காண்பது என போலீஸ் திக்குமுக்காடுகிறது.

இருவரில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு கூட போலீசுக்கு கிடைக்கவில்லை. இறுதியில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை காரணம் காட்டி இருவரையும் நீதிபதி விடுதலை செய்கிறார்.

பிறகு அந்த இருவரில் யார் அந்த கொலையை செய்தது என்பதை மகிழ்திருமேனி தமது மிகச்சிறந்த திரைக்கதையின் மூலம் சிறப்பாக கூறியிருக்கின்றார். இறுதியில் இந்தக் கதை மலேசியாவில் நடந்தது என திரைப்படம் முடிகின்றது.

ஆம் இந்த கதை மலேசியாவில் நடந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 27 வயதுடைய மலேசிய இரட்டையர்களில் ஒருவரான சதீஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய காரின் பின்புறம் அந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவர் கைது செய்யப்பட்ட அதே நாள் அவருடைய சகோதரரான சபாரீஸ்ராஜும் அதே இடத்தில் கைது செய்யப்படுகின்றார்.

166 கிலோகிராம் கெனாபிஸ் மற்றும் 1.7 கிலோகிராம் எடைக் கொண்ட ஹோபியம் போதைப் பொருட்களை 27 வயதுடைய இரட்டையர்களில் ஒருவரான சதிஸ்ராஜ் அல்லது சபாரிஸ்ராஜ்தான் கடத்தியிருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதாலும் டிஎன்ஏவும் ஒரே மாதிரி இருந்ததாலும் அடையாளம் காணமுடியவில்லை.

இது ஒரு வித்தியாசமான வழக்காக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சஹாரா இப்ராஹிம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தப் பிறகு அந்த இரட்டையர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். இவர்களில் ஒருவர் குற்றமற்றவர். ஆனால், இந்த இரட்டையர்களில் தவறாக ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கியும் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கவும் முடியாது என்று அவர் கூறினார்.

முன்னதாக தனது காரை கோலாலம்பூரில் உள்ள வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த போது இரட்டையர்களில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டிலும் காரின் பின்னாலும்தான் அந்த போதைப் பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டார். ஆனால், முதலாவதாக கைது செய்யப்பட்ட நபரிடம்தான் வீட்டின் சாவி இருந்தது. அதனால் அவர் தான் குற்றவாளியாக இருப்பார் என போலீஸ் முடிவு செய்தது. ஆனால் இருவரையும் கைது செய்த பிறகு யாரை முதலில் கைது செய்தோம் என்பதை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவை தமிழகத்தில் முதன்மை நாளேடு ஒன்று இப்படியும் நடக்குமா எனத் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதைப் படித்த மகிழ்திருமேனி இந்த கதைக்குள் ஒரு கதையம்சம் ஒளிந்து இருப்பதை அறிந்து கொண்டதாக அண்மைய நேர்காணலில் கூறினார். சில சுவாரஸ்யமான சம்பவங்களை சேர்த்து தடம் என்ற திரைப்படத்தை இயக்கி தடம் பதித்திருக்கிறார் மகிழ்திருமேனி.