மும்பை:

மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலீப் குமார்(94). இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்த திலீப் குமார், கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் உள்ள வீட்டில் பூரண ஓய்வெடுத்து வந்த திலீப் குமாருக்கு திடீரென சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 2-ம் தேதி மாலை மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் சற்று குணமடைந்த திலீப் குமார் கடந்த 9-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் நேற்று மாலை திலீப் குமார் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த தகவலை திலீப் குமாரின் மனைவியும் பாலிவுட் முன்னாள் கதாநாயகியுமான சாயிரா பானு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு ஒரு மகன் இருந்தால் அவன் ஷாருக்கான் போலவே இருப்பான் என முன்னர் திலீப் குமார் குறிப்பிட்டிருந்த சம்பவத்தை தனது பதிவில் நினைவுகூர்ந்த சாய்ரான் பானு, திலீப் குமாரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், இதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிகஉயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலீப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.