ஜோர்ஜியாவில் அனைத்துலக நடனப் போட்டி: சாதிக்க காத்திருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி பற்றாக்குறை!

ரவாங், மார்ச் 22-

பள்ளிகளுக்கான அனைத்துலக நடன போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்துகொண்ட ஒரே பள்ளியான ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தனர். ரஷ்யா பீட்டர்ஸ்பர்க் நகரில் இப்போட்டி நடந்தது.

22 நாடுகளை பிரதிநிதித்து இப்போட்டியில் மாணவர்கள் பங்கெடுத்தனர். இதில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 விருதுகளை வென்று அசத்தினார். உடை வடிவமைப்பு பிரிவில் முதல் பரிசையும் கலைநய விருதையும் வென்றனர். அதோடு சிறுவர்கள் பிரிவில் படைப்புத்திறனுக்கான முதல் பரிசையும் வெற்றி பெற்றனர்.

ஒரு தமிழ்ப்பள்ளி நடனப் போட்டியில் உலக அரங்கில் இரண்டு விருதுகளை வென்றது இதுதான் முதல் முறை என்பது மலேசிய இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது.

நடனப் போட்டியில் கலந்து கொண்ட ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

இப்போட்டியில் ரவாங் தமிழ்பப்பள்ளி சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களான பிரபாகரன், பவித்தனா முத்து கணேஷ், தமிழ்ச்செல்வி சசிதரன், நர்மதா செல்வ கணேசன், இஸ்வீணா விகிதம் ரோபர்ட், தாட்சாயினி சந்திரன், ஶ்ரீ செல்வனுசியா ஶ்ரீ முருகழகன், கார்த்திகேயன் சாமிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதன் பொறுப்பாசிரியர்கள் ஆக ரீத்தா நடராஜன், ஆறுமுகம் கோவிந்தசாமி, உமா நவலிங்கம் ஆகியோர் பணியாற்றினார்.

முன்னதாக ரஷ்யா பீட்டர்ஸ்பர்க்கிற்கு பயணமாகி நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பல நல்ல உள்ளங்கள் பண உதவி செய்ததாகவும் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆசிரியர் ரீத்தா நடராஜன் தெரிவித்தார்.

நடன ஆசிரியர் சசி காளிமுத்து

இவ்வட்டாரத்தைச் சேர்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 5,000 வெள்ளி வழங்கி மாணவர்களுக்கான நன்கொடையை தொடக்கி வைத்தார்கள். அதோடு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜும் மாணவர்களின் பயண செலவிற்காக நிதி உதவியை வழங்கினார் என்றார் அவர்.

இப்போட்டியில் பங்கெடுத்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பயணச் செலவுக்கான தொகையை ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்ததால் இதர செலவுகளை கட்டுப்படுத்த முடிந்ததாக ரீத்தா கூறினார். ரஷ்யாவில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு மலேசிய ரிங்கிட் 80,000 தேவைப்பட்டது. போட்டியில் பங்கெடுத்த மாணவர்களின் பெற்றோர்கள் 40,000 வெளி வழங்கினார்கள். இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

நடனப் போட்டியின் பொறுப்பாசிரியர்கள்.

அனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போட்டியை தம் இணையம் மூலம் தேர்வு செய்ததாக தெரிவித்தார். மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் நடன திறமையை கொண்டு வருவது எளிதான காரியம் இல்லை என்றாலும் மில்லினியம் நடனக்குழுவின் பயிற்றுனர் சசி காளிமுத்து அவர்களின் துணையோடு தான் மாணவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழர்களின் பரம்பரிய நடனமான கோலாட்டத்தை மாணவர்கள் படைத்தனர். சசிதான் இந்த வெற்றிக்கு வழிவகுத்தார் என ரீத்தா புகழாரம் சூட்டினார்.

இதனிடையே உலகளாவிய நிலையில் அடுத்த சுற்றுக்கு இவர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். இவ்வாண்டு ஜூன் மாதம் இப்போட்டி ஜோர்ஜியாவில் நடைபெறுகின்றது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு எட்டு மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர் களுக்கும் சேர்த்து மலேசிய ரிங்கிட் 70 ஆயிரம் வெள்ளி தேவைப்படுகின்றது.

உலகளாவிய நிலையில் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது நமது கடமையாகும். இவ்வேளையில் எம் பள்ளி மாணவர்களின் இலக்கிற்காக நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என பெற்றோர்களில் ஒருவரான சசி தெரிவித்தார்.

ஜோர்ஜியாவில் நடைபெறும் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 0127154032, 0162881492