அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ரந்தாவ் இடைத்தேர்தல்; மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதில் கடும் போட்டா போட்டி
அரசியல்முதன்மைச் செய்திகள்

ரந்தாவ் இடைத்தேர்தல்; மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதில் கடும் போட்டா போட்டி

கோலாலம்பூர் மார்ச் 24-

எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதில் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணிக்கிடையே  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைச் சேர்ந்த அம்னோவின் டத்தோஸ்ரீ முகமட் ஹசான்  ரந்தாவ்  சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அந்த தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கு தேர்தல் அதிகாரி வாய்ப்பு வழங்க மறுத்ததை தொடர்ந்து பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீராம் தேர்தல் வழக்கு தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து முகமட் ஹசானின் தேர்தல்  வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டது.

ரந்தாவ்  தொகுதியில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த  தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறும். அந்தத் தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு அம்னோவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியிடவிருக்கிறார்.

ஆளும் கட்சியான மக்கள் கூட்டணியின் சார்பில் பி கே ஆர் கட்சியின் ரந்தாவ் தொகுதி துணைத்தலைவர் டாக்டர் ஸ்ரீராம் போட்டியிடவிருக்கிறார்.

ரத்தாவ் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 53 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். இவர்களைத் தவிர 27 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்களும் 18 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களும் உள்ளனர்.

பிகேஆர் கட்சியை பொறுத்தவரை இந்திய  மற்றும் சீன வாக்காளர்களின்  ஆதரவை  பெறுவதில் பிரச்னை இல்லை.

அம்னோவின் தலைவர் பணிகளை இடைக்காலமாக செய்து வரும் முகமட் ஹசான் அக்கட்சிக்கு கேமரன் மலை மற்றும் காஜாங் இடைத்தேர்தலில் வெற்றியை தேடித் தருவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

ரந்தாவ் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவரான முகமட் ஹசான் அங்குள்ள    மக்களிடம் அன்பாக பழகக் கூடியவர் என்பதோடு மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் என்ற முறையில் மக்களுக்கு நன்கு அறிமுகமானராகவும்  திகழ்கிறார்

நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளரான டாக்டர் ஸ்ரீராம் சிறந்த சேவை மனப்பான்மை கொண்டவர் என பிகேஆர் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில்  உள்நாட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னலம் கருதாமல் பல்வேறு உதவிகளை வழங்கி வந்தவர் என்றும் அன்வர் புகழாரம் சூட்டியுள்ளார் .

நெகிரி செம்பிலான் மாநில பிகேஆர் கட்சியின் தலைவரும், மந்திரி புசாருமான அமிநுடின் ஹருண் ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் ஸ்ரீராமின் வெற்றிக்காக முழுவீச்சில் பாடு படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி மாநிலத்தில் 8 பிகேஆர் தொகுதிகளில் 6 தொகுதிகள் மந்திரி புசார் அமிநுடின்  வெளிப்படையாகவே பவ்வேறு எதிர்ப்புகளை எதிர் நோக்கி வருகிறார்

இந்த நிலையில் அவர் ரந்தாவ்  சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராமுக்கு வெற்றியை தேடித்தந்தால் அமிநுடின் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதோடு அரசியல் எதிர்ப்பாளர்களின் குறைகூறலுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்து தமது அரசியல் செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

ரந்தாவ் தொகுதியில் மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கு பிகேஆர் தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எப்படி இருந்த போதிலும் இந்த இடைத் தேர்தல் பிகேஆர் கட்சிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் மிகப்பெரிய சவாலாகவும் சோதனையாகும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன