திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புக்கிட் ராஜா முன்னாள் தோட்ட தொழிலாளர்களில் 64 குடும்பங்களுக்கு வீடுகள் உறுதி! 12 குடும்பங்கள்….? – சிவராசா
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

புக்கிட் ராஜா முன்னாள் தோட்ட தொழிலாளர்களில் 64 குடும்பங்களுக்கு வீடுகள் உறுதி! 12 குடும்பங்கள்….? – சிவராசா

சுங்கை பூலோ, மார்ச் 28-

கடந்த திங்களன்று புக்கிட் ராஜா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் நாடாளுமன்றத்தின் முன் அமைதி மறியலில் ஈடுபட்டதன் வழி மீண்டும் முக்கிய செய்திகளில் இடம்பெற்றுள்னர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசுவதாகக் கூறிக் கொண்ட மூன்றாம் தரப்பினர், தோட்டத் தொழிலாளர்களை நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்து அவர்கள் என்னை சந்திக்க முடியவில்லை என்று உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டினர். இது ஏன் உண்மைக்குப் புறம்பானது என்றால் நான் வெளிநாட்டில் அல்லது உடல்நலமின்றி இருக்கும் நிலையைத் தவிர்த்து பிற அனைத்து வியாழக்கிழமை இரவுகளிலும் என் தொகுதியான சுங்கை பூலோவில் எந்த முன்னறிவிப்பும் இன்றி வரும் மக்களைச் சந்தித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்கள் குறித்த உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கு நான் அவர்களின் கதையை மீண்டும் சொல்கிறேன். சைம் டார்பி, தொழிலாளர்களின் குடியிருப்புகள் இருந்த நிலத்தை மேம்படுத்த திட்டமிட்டது. அது தொழிலாளர்களுக்கு மலிவு விலை அடுக்குமாடி வீடுகளை கொடுக்க முன்வந்தது. தொழிலாளர்களின் சங்கமான NUPW அதற்கு ஒப்புக்கொண்டது. ஆனால் தொழிலாளர்கள் அதற்கு உடன்படவில்லை. அவர்கள் தங்களுக்குத் தரைவீடுகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களை வெளியேற்ற சைம் டார்பி நீதிமன்றத்தில் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள மனு தாக்கல் செய்தது.

90-களின் மத்தியிலிருந்து நான் நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதிட்டு, பல ஆண்டுகளுக்கு அந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் தள்ளிப்போடுவதில் சமாளித்து வந்துள்ளேன். தொழிலாளர்கள் மிகவும் கடினமான நிலையில் வெளியேற்றப்படுவதை எதிர்த்து போராடி வந்துள்ளனர்.

2008-ஆம் ஆண்டு சிலாங்கூரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக, சிலாங்கூர் முன்னாள் முதலமைச்சர் தான் ஸ்ரீ காலித் இப்ராஹிம் மற்றும் டாக்டர் சேவியர் ஆகியோரின் உதவியுடன் சைம் டார்பியைப் பேச்சுவார்த்தை மேசைக்கு நாங்கள் கொண்டு வர முடிந்தது. சைம் டார்பி வீடுகளை கட்டவும் பின் அந்த வீடுகளை RM70 ஆயிரத்திற்குத் தொழிலாளர்களுக்கு விற்கவும் ஒப்புக் கொண்டனர் – அந்த வீடுகளின் உண்மையான சந்தை மதிப்பு RM200 ஆயிரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு தொழிலாளரின் குடும்பத்தினரும் வங்கி கடன் பெறத் தவறி வீடு வாங்குவதில் தோல்வியடைந்தால், அந்த வீட்டை RM160 ஆயிரம் என்ற நிலையான விலையில் மேம்பாட்டாளர் வாங்கிக் கொள்வார் என்றும் பின் வீட்டு விலைபோக RM90 ஆயிரம் ரொக்க பணம் வீட்டை வாங்க முடியாதவர்களுக்குக் கிடைக்கும் என்றும் நாங்கள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

64 குடும்பங்கள் வங்கிக் கடன்களைப் பெற்று இன்று RM250 ஆயிரம் தொடங்கி RM 300 ஆயிரம் சந்தை மதிப்பினைக் கொண்ட வீடுகளுக்கு உரிமையாளர்களாக உள்ளனர். 12 தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வீட்டுக் கடன் பெற தகுதி பெற வில்லை. ஆகவே, விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் (SPA) நிறைவடைந்தப் பின் மேம்பாட்டாளர்களின் அவர்களின் வீடுகளை விற்று விட்டனர். அவ்வாறு செய்வதற்குறிய மேம்பாட்டாளரின் சட்டபூர்வமான உரிமையைத் தடுக்க மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. மாநில அரசு தொடர்ந்து மேம்பாட்டாளரைக் கட்டாயப்படுத்தி வீடுகளை விற்காமல் வைத்திருக்கவும் இயலாது.

மாநில அரசு, இன்றுவரை அந்த 12 குடும்பங்களுக்கு உதவ முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் (LPHS), சைம் டார்பியின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பு ஆகியவற்றுடன் சந்திப்பு நடத்தினர் . அந்தச் சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்.

மாநில அரசு RM90 ஆயிரம் மதிப்புள்ள மாற்று வீடுகளை அடையாளம் காணும் என்றும் சைம் டார்பி அந்த வீடுகளுக்கான தொகையினை தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய RM90 ஆயிரத்திலிருந்து செலுத்தும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, தொழிலாளர்கள் அல்லது அரசு சாரா அமைப்பினர் இன்று வரை அதற்கு பதிலளிக்கவில்லை என LPHS கூறியுள்ளனர்.

திங்கட்கிழமை நான் அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் இது குறித்து பேச விரும்பினால் இவ்வார வியாழக்கிழமை என்னை என்னுடைய சேவை மையத்தில் சந்திக்கலாம் என கூறியுள்ளேன்.

2008-இல் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தை சிலாங்கூர் வாக்காளர்கள் மாற்றியிருக்கவில்லை என்றால் இன்று இந்த தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தரைமட்டமாகி இருக்கும். நிச்சயமாக மலிவுவிலை அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் தஞ்சமடைந்திருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். 2008-ஆம் ஆண்டு வரை வெளியேற்றத்திற்கு எதிராக வெற்றிகரமாக போராடி படிப்படியாக அதற்குத் தீர்வு காணப்பட்டது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று 64 குடும்பங்கள் நல்ல மதிப்பினைக் கொண்ட வீடுகளைக் கொண்டுள்ளனர்.

மேலும், ஓர் ஆண்டும் மேலாக, சம்பந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் LPHS-யுடன் எந்தவொரு தொடர்பிலும் இல்லை என்றாலும் மீதமுள்ள 12 பேரின் சிக்கலைத் தீர்க்க நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். அவர்கள் LPHS-உடன் கலந்துரையாடல்களைத் தொடர ஆர்வமாக இருந்தால், நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன்.

சிவராசா இராசையா

புறநகர் மேம்பாட்டு துறை துணை அமைச்சர் ,

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன