கிள்ளான், மார்ச் 28-

இங்குள்ள ஓர் இந்தியக் குடும்பம் மிகப்பெரிய இன்னலை எதிர்நோக்கி வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வைரலாக பரவியது. கண் பார்வையை இழந்த தந்தை மூன்று பிள்ளைகளுடன் மிகப்பெரிய சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை உடனடியாக அறிந்து கொண்ட சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதியின் முன்னாள் தலைவரும் கோத்தா ராஜா தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவருமான கஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார்.

மாற்றுத் திறனாளியான தந்தை மூன்று பிள்ளைகளுடன் வாழ்க்கை செலவினத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருவதாக கஜேந்திரன் கூறினார். இதன் தொடர்பில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு உடனடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று நிலைமையை கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.

வீட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக சமைத்து சாப்பிடுவதற்கு கூட வசதிகள் இன்றி அவர்கள் அவதிப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி ஒரு வீட்டில் இருக்கக் கூடிய அத்தியாவசிய பொருட்களும் அங்கு இல்லை என்றார் அவர்.

இக் குடும்பத்தின் மொத்த வருமானம் ஆயிரம் வெள்ளிக்கு குறைவாக இருப்பதால் அவர்கள் வாழ்க்கை செலவினத்தை ஈடுகட்ட முடியாமல் தவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்பில் தாம் மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதி தலைவர் தினாளன் ராஜகோபால் அவர்களை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கஜேந்திரன் தெரிவித்தார்.

அதோடு ஹெபார்ட் இயக்கத்தின் தலைவர் கணேசன் அப்பாசாமி ஆகியோரின் உதவியோடு அக்குடும்பத்திற்கு 1,500 வெள்ளி நிதி உதவி வழங்கப்பட்டது. அதோடு அவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் கஜேந்திரன் கூறினார்