அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ASTI ஏற்பாட்டில் இளம் ஆய்வாளர்களின் சாம்பியன் லீக் 2019: தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை
சமூகம்முதன்மைச் செய்திகள்

ASTI ஏற்பாட்டில் இளம் ஆய்வாளர்களின் சாம்பியன் லீக் 2019: தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

ஷா ஆலம், ஏப்ரல்  1-

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென நாடு தழுவிய அளவில் நடைப்பெற்று வரும் அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தின் அறிவியல் விழா மாணவர்களிடையே அறிவியல் பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, சரியான பரிசோதனை முறைகளை கற்பித்து, ஆக்கச்சிந்தனைகளை விதைத்து, கண்டுபிடிப்பு, புத்தாக்கம் போன்றவற்றில் ஈடுபட செய்கிறது.

இந்த அறிவியல் விழாவின் தாக்கம் நம் நாட்டோடு நிறுத்திவிடாமல், நமது மாணவர்கள் இங்கிலாந்து, தைவான், சீனா, கொரியா, ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து, கனடா, ரஷ்யா, போன்ற நாடுகளில் நடைபெறும் அனைத்துலக போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்று தமிழ்ப்பள்ளிகளுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களின் வெற்றிகளை அங்கீகரிக்கும் வகையில் நீர்வளம், நிலம் மற்றும் இயற்கைவள துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் அவர்கள் ASTIயுடன் இயக்கத்துடன் இணைந்து அனைத்துலக போட்டிகளில் 2018ஆம் ஆண்டு வென்ற போட்டியாளர்களுக்காக இந்த இளம் ஆய்வாளர்களின் சேம்பியன் லீக் எனும் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.

சனிக்கிழமை ஷா ஆலம் மிட்லண்ஸ் மாநாடு மையத்தில் காலை 9.00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் அனைத்துலக ரீதியில் பங்கேற்ற பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான தலைப்புகளில் தங்களின் ஆய்வுகளை படைப்பாக வெளிப்படுத்தினர்.

இதில் ‘சைவ நகட்’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வினை செய்த பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவர்களூம் ‘வாழை நாரில் கூரை வீடு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்த ஜோகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்களும், ‘மூலிகை டீசல் கருவி’யை தயாரித்த லாடாங் வெலஸ்லி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர்.

இது போன்ற போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றிகளைக் குவிப்பது பள்ளிக்கு மட்டுமல்லாமல் நம் நாட்டுக்கும் பெருமைச் சேர்த்துள்ளனர் என டாக்டர் சேவியர் கூறினார். “தங்களின் தயாரிப்பை வணிகமயமாக்குதல்” என்ற கருப்பொருளை முதன்மை நோக்கமாக கொண்டு கலந்துகொள்ளும் மாணவர்கள் தாங்கள் செய்த புத்தாக்கத்தை எப்படி வணிகம் செய்வதென்று அறிந்து கொள்வதற்கு இப்போட்டி ஒரு சிறந்த தளமாக அமைந்திருக்கிறது.

இது குறித்து ASTIயின் தலைவர் முனைவர் முகமட் யூனுஸ் கூறுகையில், இந்த விழாவை நாங்கள் தொடர்ந்து நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் திறமை அவர்கள் வெளிநாடுகளிலும் சாதனை படைக்க வைக்கும் என்பதை நாம் உணர்த்த வேண்டும். அதோடு, மாணவர்கள் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதால் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கண்டுப்பிடிப்புகளை தவிர்த்து, இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களை வர்த்தகர்களாக நினைத்துக் கொண்டு நீதிபதிகளை வணிகர்களாக கருதி தங்களது தயாரிப்பு பொருட்களின் தனிச்சிறப்புகளை எடுத்துக் கூறுவதற்கு இது ஒரு சிறந்த களமாக அமைகிறது. நமது நாட்டின் சிறந்த வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் முழு ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன