அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ரியல் மாட்ரிட்டைக் காப்பாற்றினார் கரீம் பென்சீமா !
விளையாட்டு

ரியல் மாட்ரிட்டைக் காப்பாற்றினார் கரீம் பென்சீமா !

மாட்ரிச், ஏப்.1-

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் கரீம் பென்சீமா அடித்த கடைசி நிமிட கோலால், ரியல் மாட்ரிட் மீண்டும் ஓர் அவமானத்தில் இருந்து தப்பியுள்ளது. லா லீகா போட்டியில் கடைசி இடத்தில் இருக்கும் ஹுவேஸ்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3- 2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

ஆட்டம் 2 – 2 என்ற கோல்களில் சமநிலையில் முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பென்சீமா போட்ட கோல் ரியல் மாட்ரிட்டுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நெதர்லாந்தின் ஆயக்ஸ் ஆமஸ்டர்டம், தனது பரம வைரியான பார்சிலோனா என இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்ட ரியல் மாட்ரிட் ஹுவேஸ்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடவில்லை.

சினிடின் சிடானின் வருகை ரியல் மாட்ரிட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவ்வணியின் ஆட்டத்தரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 3  ஆவது நிமிடத்தில் குக்கோ ஹெர்னான்டேஸ் போட்ட கோலின் மூலம் ஹுவேஸ்கா 1 – 0 என முன்னணிக்கு சென்றது.

ஹுவேஸ்காவின் கோல் ரியல் மாட்ரிட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் இஸ்கோ போட்ட கோலின் மூலம் ரியல் மாட்ரிட் ஆட்டத்தை சமப்படுத்தியது. 62 ஆவது நிமிடத்தில் டானி கெபேல்லோஸ் போட்ட கோலின் வழி, ரியல் மாட்ரிட் 2- 1 என முன்னணிக்குச் சென்றது. எனினும் 74 ஆவது நிமிடத்தில் ஹுவேஸ்கா மீண்டும் ஆட்டத்தை சமப்படுத்தியது.ஆட்டம் சமநிலையில் முடிந்துவிடும் என ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அஞ்சிய வேளையில் 89 ஆவது நிமிடத்தில் கரீம் பென்சீமா போட்ட கோல், அந்த அணிக்கு வெற்றியைத் தேடி தந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன