அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மூவி மலேசியாவில் ஏன் வெளியிடப்படவில்லை? உண்மை தகவல்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மூவி மலேசியாவில் ஏன் வெளியிடப்படவில்லை? உண்மை தகவல்

விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். கடந்த வெள்ளிக்கிழமை உலகளாவிய நிலையில் வெளியீடு கண்ட இத்திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகின்றது. இந்நிலையில் மலேசியாவில் மட்டும் இத்திரைப்படத்தை வெளியிடவில்லை.

மலேசியாவின் திரைப்பட தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தை தடை செய்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மலேசிய தணிக்கை வாரியத்திற்கு அந்தப் படம் இன்னமும் அனுப்பப்பட வில்லை என்பதுதான் உண்மை தகவல்.
மலேசியாவில் விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரது திரைப்படம் வெளியீடு காணும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். சூப்பர் டீலக்ஸ் மூவி ஏன் மலேசியாவில் திரையிடப்படவில்லை என்பது குறித்து அநேகன் ஆராய்ந்தது.

மலேசியாவில் திரைப்படங்கள் சார்ந்த வர்த்தகத்தில் லோட்டஸ் குழுமம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. பின்னாளில் சுவரா நெட்வொர்க், மாலிக் ஸ்ரிம் காப்பிரேஷன், டிஎஸ் ஆர், டிஎம்ஒய் ஆகிய நிறுவனங்களும் களத்தில் குதித்தன.

மலேசியாவில் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு பல நிறுவனங்கள் தயாராக உள்ள நிலையில் படங்களின் நிர்ணய விலையும் அதிக மடங்கு உயர்ந்தது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதில் நம் நாட்டில் உள்ள முதன்மை திரைப்பட வெளியீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தன.

தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் மூவி க்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதால் இத்திரைப்படத்தை வாங்குவதற்கு மலேசியாவில் உள்ள எந்த நிறுவனமும் முன் வரவில்லை. அதிக விலை கொடுத்து வாங்கி அப்படம் வெற்றியை தராத பட்சத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனங்கள் எதிர் கொள்ள வேண்டி வரும்.

திரைப்பட விநியோகஸ்தர் துறையைப் பொறுத்தவரையில் ஒரு நடிகரின் இதற்கு முன்னர் வந்த படத்தின் வசூல் விவரத்தை வைத்துத்தான் புதிய திரைப்படத்தின் விலையும் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா, சீதக்காதி, ஆகிய திரைப்படங்கள் மலேசியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதில் ஜுங்கா திரைப்படத்தை டிஎம்ஓய் நிறுவனம் வெளியிட்டது. தற்போது சூப்பர் டீலக்ஸ் மூவி யையும் அவர்கள்தான் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. நியாயமான விலைக்கு இத்திரைப்படத்தை தருவதற்கு தயாரிப்பு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிகின்றது. இன்னும் சில நாட்களில் மலேசியாவின் தணிக்கை வாரியத்தின் அனுமதியோடு இத்திரைப்படம் வெளிவரும் என நம்பப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன