முகப்பு > கலை உலகம் > இயக்குனர் மகேந்திரனின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இயக்குனர் மகேந்திரனின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!

சென்னை, ஏப்ரல் 2-

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் 79 வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரனின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் ஜான் மகேந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த செய்தி அறிந்த தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை சமூக தளங்களில் தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவை ரசிப்பவர்களுக்கு மகேந்திரனை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அவர் இயக்கிய உதிரிப்பூக்கள் எனும் திரைப்படம் தமிழ் திரை உலக வரலாற்றில் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை கருதப்படுகின்றது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வில்லனாக தோன்றி அனைவரையும் அசத்தினார். அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் தோன்றினார்.
அவரின் மறைவு தமிழ் திரை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் தரமான திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அவர் தொடர்ந்து நிலைத்திருப்பார் என நடிகர்களும் இயக்குனர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நிலைத்திருப்பார் மகேந்’திறன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன