புத்ராஜெயா, ஏப்ரல் .2-

இந்திய சமுதாய வளர்ச்சியையும் மீட்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டுள்ள ‘மித்ரா’, கடந்த ஆட்சியில் ‘செடிக்’ மூலம் நடைபெற்றவற்றை படிப்பினையாகக் கொண்டு மிகுந்த பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுகின்ற வேளையில், மிதரா-வின் தற்போதைய நடவடிக்கைப்பற்றி முழு விவரத்தையும் அறியாமல் சிவகுமார் பேசுவதும் அறிக்கை விடுவதும் ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்று பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் முன்னதாக சிவகுமார் எழுப்பிய வினாவிற்கு நாடாளு-மன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் முழு விவரம் அளிக்கப்பட்-டுள்ள நிலையில், அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ‘செடிக்-2.0’ என்று மித்ரா-வை விமர்சனம் செய்திருக்கும் சிவக்குமாரின் நடவடிக்கை பொருத்தமற்றது; உள்நோக்கமுடையது.

2019 மார்ச் 15-ஆம் நாள் வரை பெற்ற மித்ரா பெற்ற 414 விண்ணப்பங்களில் முதற்கட்டமாக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் 50. இந்திய சமுதாய பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, வேலை வாய்ப்புக்கான பயிற்சி ஆகியவை குறித்த விண்ணப்பங்கள் மட்டும் முதற்கட்ட பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பெரும்பாலான அரசு சாரா அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் கடந்த ஆட்சியின்போது செடிக்-இடமிருந்து நிதி பெற்றவை. முறையான கணக்கு அறிக்கையைக் காண்பிக்காத அத்தகைய அமைப்புகள் புதிய பெயரில் மீண்டும் நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

இவற்றை யெல்லாம் ஆழமாகவும் நிதானமாகவும் பரிசீலிக்க வேண்டிய கடப்பாடும் பிரதமர் துறை மூலம் வழங்கப்படும் இந்த நிதி சமுதாயத்திற்கு பரவலாக பயன்பட வேண்டும் என்ற அக்கறையும் கொண்டுள்ள மித்ரா, இரட்டைக் கவனத்துடன் காரியமாற்ற வேண்டி இருப்பதை பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான சிவகுமார் போன்றவர்கள் எண்ணிப் பார்த்து அதன்பின் கருத்து தெரிவிக்க வேண்டும்.

363,888,153.83 வெள்ளிக்காக 414 விண்ணப்பங்களை மித்ரா பெற்றுள்ள நிலையில், 18,421,587.00 வெள்ளி மதிப்புடைய 12 விண்ணப்பங்களை தற்பொழுது மித்ரா அங்கீகரித்துள்ளது. இவற்றில், ‘கொன்சோர்ட்டியம் ப்ரா-ஸ்கோலா’ என்னும் அமைப்பும் ஒன்று.

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு முழு நிதியும் உடனே வழங்கப் படுவதில்லை. பகுதி நிதி மட்டும வழங்கப்பட்டு, அவற்றின் முதற்கட்ட நடவடிக்கைக்குப் பின் மீதி நிதி அளிக்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் மித்ரா தனித்தனியே ஒப்பந்தம் செய்துள்ளது என்பதையும் சிவகுமாருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.